யாழ். மாவட்டத்தில் செயலிழந்து போன தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து செக்குடியரசின் பிரதி அமைச்சர் தோமஸ்டப் தலைமையிலான குழு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்தது.
இலங்கைக்கான செக் நாட்டு மிலோசவ் ஸ்டசெக், பிரதி அமைச்சரின் ஆலோசகர் ரூடோல்வ் ஹிக்கி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்களுடன் இலங்கையின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணம் வந்திருந்தார். குழுவினர் முதலில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலு வலகத்தில் சந்தித்தனர்.
யாழ். மாவட்டத்தில் உள்ள நிலப்பயன்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக அப்போது கலந்துரையாடப்பட்டது. யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரையும் செக் குழுவினர் சந்தித்தனர். அரைமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப் பின் போது, யாழ். மாவட்டத்தில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதுக்கான வாய்ப்புக் குறித்து ஆராயப்பட்டது.
புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், மாவட்டத்தின் மீள் குடியமர்வு நிலைமைகள், அபிவிருத்தி என்பன குறித்தும் வந்திருந்த குழுவினரால் கலந்துரையாடப்பட்டது.
"செக் குடியரசு அமைச்சரும் வந்திருந்தவர்களும் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மீளவும் இயங்கச் செய்வதுக்கான சாத்தியங்கள் குறித்தே அதிக ஆர்வம் காட்டினர்'' என்று அரச அதிபர் கூறினார்.
வீதி, மின்சாரம், நீர் விநியோகம் ஆகிய துறைகளில் அபிவிருத்திப் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் அவற்றை மேம்படுத்துவதற்கான உதவிகள் அவசர தேவையாக இருக்கின்றன என்று அரச அதிபர், குழுவினரிடம் வலியுறுத்தியுள் ளார்.
No comments:
Post a Comment