Tuesday, May 31, 2011

50 குடும்பங்களுக்கான கூரைத்தகடுகள் விநியோகம்


இன்று 31 மே 2011 செவ்வாய்க்கிழமையன்று யாழ் பிரதேச செயலக வளாகத்தில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான கூரைத்தகடுகள் விநியோகம் பிரதேச செயலாளர் எஸ்.தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்றது.
யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபியான் அவர்கள் மேற்படி விநியோக நிகழ்வை புரக்கணிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இன்று காலை மேற்படி நிகழ்விற்கு சென்ற மக்களையும் வீதியில் வைத்து தடுத்தமையால் சோனகர்தெருப்பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியது, எனினும் கூறைத்தகடு விநியோகத்திற்காக பிரதேச செயலாளரால் தெரிவு செய்யப்பட்ட அனைத்துக் குடும்பத் தலைவர்களும் மேற்படி நிகழ்வில் பங்கேற்று கூறைத்தகரங்களைப் பெற்றுக்கொண்டனர், சுமார் 10,000.00 ரூபா மதிப்புள்ள மேற்படி கூறைத்தகடுகள் இந்திய நிவாரணத்திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன்போது கருத்துவெளியிட்ட பிரதேச செயலாளர்
யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவிலேயே முஸ்லிம் மக்கள் அதிகம் செறிவாக வாழ்கின்றனர், அவர்களது மீள்குடியேற்ற செயற்திட்டம் ஒழுங்குற நடைபெறுவதற்கு நாம் எம்மாலான ஒத்துழைப்புக்களை முழுமையாக எவ்வித பாகுபாடுமின்றி வழங்கிவருகின்றோம். பல்வேறு தடைகளைத் தாண்டியே நிவாரணங்களை எமது மக்களுக்கு வழங்க முடிகின்றது,இந்திய உதவிகள், உலக உணவுத்திட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் யூ.என்.எச்.சீ.ஆர் ஆகியன மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்கான உதவிகளை வழங்குகின்றன, இவை மீள்குடியேறும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, இது அவர்களது உரிமையுமாகும், ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் இவற்றை வைத்து அரசியல் இலாபம் ஈட்ட முனைகின்றனர், இதனால் பல  சிக்கல்கள் தோன்றுகின்றன,
தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு உலக  உணவுத்திட்டத்தின் உதவிகளும் யூ.என் எச்.சீ.ஆரின் உதவிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, இதற்கான காரணத்தை மக்கள் சரியாக உணர்ந்துகொள்ள வேண்டும்,யாழ் மாநகரசபை உறுப்பினர் சுபியான் அவர்கள் மேற்படி உதவிகளை தனது அரசியல் நோக்கத்திற்காக திசைதிருப்ப  முயன்றதன் விளைவாகவே அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, அவரால் இங்கே பல  குழப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றது, இப்போது கூறைத்தகடுகள் விநியோகத்தையும் குழப்பியடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார், கூறைத்தகடுகள் அவரின் ஊடாகவே விநியோகிக்கப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு, அது நிகழாதபோது வேறுவகையான காரணிகளை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார், இதன் மூலம் மக்கள் குழப்பம் அடைகின்றனர்,இந்தக்குழப்பத்தை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்துகின்றார், மேற்படி விடயங்கள் குறித்து நான் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன், மீள்குடியேற்ற நடவடிக்கை மாநகர மட்டத்திலான அரசியல் பிரதிநிதிகளினூடாக மேற்கொள்ளப்படும் விடயம் அல்ல, இதனை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.
யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அரசியல் சார்பில்லாத சமூக அமைப்பு, அவ்வமைப்பினர் மீள்குடியேற்ற செயற்திட்டத்தில் எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர், மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டமொன்றினை எதிர்வரும் நாட்களில் கூட்டும்படி குறித்த சம்மேளனத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.அக்கூட்டத்தில் மீள்குடியேற்ற செயற்திட்டம் குறித்து என்னால் மக்களுக்கு விளக்கமளிக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர், எஸ். தெய்வேந்திரம் கேட்டுக்கொண்டார்.
முதற்கட்டமாக 49 குடும்பங்கள் இன்று கூறைத்தகடுகளைப்பெற்றுக்கொண்டன, அடுத்த கட்டமாக மேலும் 50 குடும்பங்களுக்கான  கூறைத்தகடுகள் விநியோகம் அடுத்த வார ஆரம்பத்தில் இடம்பெறும்.
தகவல்
அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின்
பொதுச்செயலாளர்- யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்.

Sunday, May 29, 2011

குடாநாட்டில் புதிய கடன் வழங்கலில் கடற்றொழிலாளர் உள்ளடக்கப்படவில்லை

புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு இலங்கை வங்கியுடன் இணைந்து செயற்படுத்துகின்ற கடன் வழங்கும் திட்டத்தில் கடற்றொழிலாளர்கள் உள்வாங்கப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வங்கிகளூடாகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாலும் உரிய அறிவுறுத்தல்கள் இன்மையாலும் தாங்கள் அதனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தற்போது புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு இலங்கை வங்கியுடன் இணைந்து குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குக் கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை சாவகச்சேரியிலும் சனிக்கிழமை காரைநகரிலும் நடைபெற்றன.
ஏனைய சுயதொழில்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்குக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கடற்றொழில் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் மூலமே பரிசீலிக்கப்படுமென்று நேர்முகத் தேர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கூடியளவு நிதி வேண்டுமென்றும் அதனால் துறைசார் அதிகாரிகளின் சிபார்சுகளின் பின்னர் அவர்கள் மூலமாக இதற்கான கடன்திட்டம் மேற்கொள்ளப்படுமென்றும் காரைநகருக்கு வந்திருந்த மேற்படி அமைச்சினதும் வங்கியினதும் அதிகாரிகள் கூறியதாகக் கடற்றொழிலுக்காக விண்ணப்பித்தவர்கள் தெரிவித்தனர்.

Saturday, May 28, 2011

புத்தளத்தில் அரசின் வீட்டுத்திட்டம் பெற்றிருந்தால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதை வழங்க முடியாது; முஸ்லிம்கள் தொடர்பாக யாழ். அரச அதிபர் தெரிவிப்பு


news
 யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கு அரசின் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது.புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்ட உதவிகள் பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்படுவதாக உதயனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பாக யாழ். அரச அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற இந்த முஸ்லிம்களில் அநேகமானோர் புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளனர். அங்கு இருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு அரசினாலும் உலக வங்கியினாலும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ளார்கள். இங்கு அவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவிகள் உட்படப் பல உதவிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அதற்கான முன்னேற்பாடாக அவர்களுக்குப் பதிவு அட்டையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் புத்தளத்தில் சட்ட ரீதியாக வீட்டுத் திட்டங்களைப் பெற்றவர்களின் பெயர் விவரங்களைப் புத்தளம் மாவட்ட அரச அதிபர் எமக்குத் தற்போதுதான் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி புத்தளத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றவர்களுக்கு இங்கு மீண்டும் வீட்டுத்திட்டங்கள் வழங்கமுடியாது. அவர்கள் இங்கு தமது செலவிலேயே தமக்கான தங்குமிடங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். புத்தளத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளாமல் உள்ள முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்டங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வாரத்தில் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.இதற்கான நடவடிக்கைகளை யாழ். பிரதேச செயலாளர் முன்னெடுத்து வருகிறார். வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத முஸ்லிம் மக்களுக்கு அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி கடிதங்களை அனுப்பி வைக்குமாறு நான் அவரைப் பணித்துள் ளேன்  என்றார்.            

வடக்கிலிருந்து வெளியேறியோர் மீளக்குடியமர்வதில் சிக்கல்

கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வெளிமாவட்டங்களிலும் வாழ்ந்தவர்களில் சிலர் தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி மீளக்குடியேற முயற்சித்து வரும் நிலையில் இவர்கள் தமக்கு புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கிராம சேவையாளர்களுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் பல்வேறு கேள்விளைக் கேட்டு விண்ணப்பப்படிவங்களைத் தர மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர் இடாப்பில் பெயர் இருக்க வேண்டும் அல்லது குடியிருந்ததற்கு உரிய ஆவணம் தேவை என்று கூறப்படுகின்றதாம். குறிப்பாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதேபோல மீளக்குடியேறும் இவர்களில் சிலர் தமது பழைய வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மீளப்பெறுவதற்கும் அல்லது அந்த வங்கிக் கணக்கைத் தொடர்ந்து செயற்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சில வங்கிகளில் பழைய வங்கிக் கணக்கு மூடப்பட்டுள்ளது. ஆவணங்களைத் தேட வேண்டும் என்றும் வங்கி உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமக்கு இவ்வாறான தடைகளை நீக்கி தமது கருமங்களை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Friday, May 27, 2011

கடல் இயந்திரவியல் கல்லூரிக்கு இருமாடிக் கட்டிடம் நிர்மாணம்

யாழ்நகர் நிருபர் : ஜப்பானிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்காவின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் குருநகர் கடல் இயந்திரவியல் கல்லூரிக்கு ஐம்பது மில்லியன் ரூபா செலவில் புதிய இருமாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. கட்டிடவேலைகள் செப்டெம்பரில் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிட வேலைகளை நேரில் அவதானித்த கொழும்பு சமுத்திரவியல் கல்லூரி பணிப்பாளர் நாயகம் எம்.நாணயக்கார கட்டிடவேலைகள் பூர்த்தியானதும் யாழ்ப்பாணத்தில் மேலும் சில கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுமென கூறினார். கல்லூரிக்கு கணினி உட்பட பல பொருட்களையும் அவர் வழங்கினார். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு கொழும்பு தங்காலவிலும் பயிற்சிவழங்கப்படுமென்றார்.

தமிழரின் ஏக பிரதிநிதிகளாக எவரையுமே ஏற்க முடியாது; அரசு நேற்று அறிவிப்பு

தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழ்க் கூட்டமைப்பு உட்பட எவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லி இருக்கிறது அரசு.

"தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பலர் உள்ளனர். அவர்களில் யார் ஏக பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிப்பர்''  என்றார் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன.அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.   

அவர் மேலும் கூறியதாவது:
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் பதிலளிக்க மாட்டோம். ஆனால், அதில் அடங்கியுள்ள சில விடயங்களுக்கு விளக்கமளிப்போம். இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு நாம் விளக்கமளிக்கத் தொடங்கியுள்ளோம். யுத்த காலத்தில் இதைவிட மோசமான குற்றச்சாட்டுகள் எமக்கெதிராக முன் வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நாம் உலக நாடுகளுக்கு விளக்கமளித்தோம். அதனால் உலக நாடுகள் எம்மீது கொண்டிருந்த சந்தேகம் நீங்கியது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவ்வாறான நிலைதான் ஏற்படும்.குற்றச்சாட்டுகளைக் கண்டு நாம் பயப்படமாட்டோம். கடந்த காலங்களில் மிகப்பாரதூரமான குற்றச்சாட்டுகளை நாம் சந்தித்து அவற்றைப் பொய்யாக்கியிருக்கின்றோம்.யுத்த காலத்தின்போது அரசு மனித உரிமைகளை மதித்து நடந்தது என்பதற்கு அதிக சான்றுகள் எம்மிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் உலக நாடுகளுக்குக் காண்பிப்போம்.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று அரசு அரசியல் தீர்வை வழங்காததால்தான் ஐ.நாவின் அறிக்கை வெளியிடப்பட்டது என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்கமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஆனால், தமிழரின் ஏக பிரதிநிதிகளாக எம்மால் எவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைத் தமிழர்களே தீர்மானிக்கவேண்டும் என்றார்.  

புலனாய்வு செய்வதற்கு புதிதாக 5 பேர் கொண்ட விசாரணைக்குழு

வடக்கு, கிழக்கில் நடைபெற்றவை என்று கூறப்படும் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாகப் புதிதாகப் புலனாய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கென 5 பேர் கொண்ட நீதிவான்கள் குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிபதிகள் குழுவானது தனது புலனாய்வுகளின் விவரங்களை இலங்கை மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கும் என்று அந்தக் குழு வின் புதிய தலைவர் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியாந்த பெரேரா மேற்படி குழுவின் நியமனம் பற்றித் தெரிவிக்கையில்
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் மூன்று பேர் சிங்கள சமூகத்தையும் ஏனைய இருவரில் ஒருவர் தமிழ்ச் சமூகத்தையும் மற்றவர் முஸ்லிம் சமூகத்தையும் சேர்ந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாய் இருந்து ஓய்வுபெற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தச் செயற்பாடுகள் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் என்று தாம் எதிர்பார்க்கிறார் என்று கூறிய நீதியரசர் பெரேரா,  இந்த நீதியரசர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்கு இணங்கச் செயற்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்கு வழக்குகளின் அடிப் படையிலேயே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் மாத அடிப்படையில் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழுவின் விசாரணைகள் விசேடமாக உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களிடமிருந்து வந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாகவே அமைந்திருக்கும். என்றாலும், நாட்டிலுள்ள ஏனைய மக்களும் சுயேச்சையாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். மனித உரிமைகள் குழு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களிடமிருந்து சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏராளமான முறைப் பாடுகளைப் பெற்றுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகளை மிக விரைவாக நடத்தி முடிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாத பிரதிவாதிகள் தொடர்பாக நீதியரசர் பெரேரா தெரிவிக்கையில், அப்படியானவர்களை அழைப்பித்துக் காரணம் காட்டும்படி கேட்கப்போவதாகக் கூறினார்.
நான் ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருடன் இது பற்றிக் கலந்தாலோசித்துள்ளேன். பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத் துவதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப் படாதவிடத்து முறையீட்டாளர்கள் குழுவுக்கு அல்லது பொலிஸ் மாஅதிபருக்கு அது பற்றி அறிவிக்க வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மனித உரிமை மீறல்களால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டுவிக்கப் போவ தாகவும் நீதியரசர் தெரிவித்தார்.

Wednesday, May 25, 2011

யாழ்.மாவட்ட அரச சேவையில் தற்போது 569 வெற்றிடங்கள்

யாழ்ப்பாணத்தில் அரச சேவையில் 569 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்கள் பல்வேறு மட்டங்களில் காணப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
கிராம சேவையாளர்கள் 114, எழுது வினைஞர்கள் 225, எழுதுவினைஞர் (சுப்றா)  12, நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள் 16, அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் 04, மொழிபெயர்ப்பாளர்கள்  23, அலுவலக உதவியாளர்கள் 128, வாகனசாரதிகள் 11, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 18, பொறியியலாளர்கள்  11, எஸ்.எல்.ஏ.ஏஸ். பதவிநிலை உத்தியோகத்தர்கள் 07 ஆகிய வெற்றிடங்கள் தற்போது உள்ளன.
இவையனைத்தும் யாழ். மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்களிலும் காணப்படும் வெற்றிடமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று கேட்டதற்கு, இந்த வெற்றிடங்கள் தொடர்பாகப் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் . அவர்கள் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்  என்றார் அவர்.

வலி.வடக்கு, வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்திக்கு 2,600 மில்லியன் ரூபா தேவை; கொழும்பில் நடந்த கூட்டத்தில் யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு

வலிகாமம் வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவை.யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இவ்வாறு உலக வங்கிக் குழுவிடம் கேட்டுள்ளார்.
வலி.வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உலக வங்கியின் உயர்மட்டக்குழு கடந்தவாரம் நேரடியாகச் சென்று திட்ட மதிப்பீடுகள் குறித்து ஆராய்ந்தது.இது குறித்து தீர்மானங்களை எடுக்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்துக்கு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் அழைக்கப்பட்டிருந்தார்.
 
இதன்போது அவர் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விடயங்களை உலக வங்கிக் குழுவிடம் எடுத்துரைத்தார்.அத்துடன் இதுவரை விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப 2ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவை என்ற திட்ட அறிக்கையையும் அங்கு சமர்ப்பித்தார்.இந்தப் பகுதிகளில் உலக வங்கிக் குழு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, May 24, 2011

On You Tube- Jaffna Muslim Issue

On You Tube- Jaffna Muslim Issue

வடமாகாணத்துக்கு 4 ஆயிரத்து 97 மில்லியன் அபிவிருத்திக்கடன்;மத்திய வங்கி ஆளுநர் தகவல்

யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மாதம் வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் வடமாகாணத்தில் 38 ஆயிரத்து 277 பேருக்கு 4 ஆயிரத்து 97 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். 
இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் இந்த நாட்டில் முடிவடைந்ததாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகப் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த இரண்டாண்டு காலப் பகுதியில் வடமாகாணத்தில் 38 ஆயிரத்து 277 பேருக்கு 4 ஆயிரத்து 97 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தினூடாகப் 13 ஆயிரத்து 980 பேருக்கு ஆயிரத்து 903 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் கடனாகப் 19 ஆயிரத்து 502 மில்லியன் ரூபா விநியோகிக் கப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஊடாக 4 ஆயிரத்து 133 பேருக்கு 210 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாகாண அபிவிருத்திக் கடன் திட்டத்தினூடாக 640 பேருக்கு 378 மில்லியன் ரூபா நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. கால் நடை அபிவிருத்திக்காக 492 பேருக்கு 64 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது . மற்றும் சுபீட்சத்துக்கான கடன் திட்டம் மூலமாக 47 பேருக்கு 40 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள் ளது. இதேவேளை, இதே இரண்டு வருட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 26 ஆயிரத்து 577 பேருக்கு 2 ஆயிரத்து 170 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, May 23, 2011

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?: இஜ்லண்ட்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார்.ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2 ஆவது ஆண்டு நிறைவினையும் நிபுணர் குழு அறிக்கையினையும் முன்னிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக் குவிப்பினைப் பெறுவதற்கும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் கடந்த 10 ஆம் திகதி நோர்வே தமிழ் கற்கை மையம் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

இக் கருத்தரங்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

ஜான் இஜ்லண்ட் தனது கருத்துரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்படுவது வன்முறை சார்ந்த அவலங்களுக்கு முகம் கொடுத்த தேச மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு பொறுப்புக் கூறப்பட்டு திருத்தப்படாவிடின் நடந்தேறிய அவலங்களும் தவறுகளும் மீண்டும் நடந்தேறும் அபாயம் உள்ளது. எனவே உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரு தரப்பு மீதான போர்க் குற்றச் சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். வென்ற தரப்பான கொழும்பு அதிகார மையத்தின் மீதே பொறுப்புக் கூறும் வகையிலான கவனம் குவிக்கப்பட வேண்டும்.

தேசிய அரசுகள் தமது சொந்த மக்களை இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், இனத்துடைப்பு மற்றும் மனிதத்திற்கு எதிரான மீறல்களிலிருந்து பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் ஒருமித்தும் விரைவாகவும் வலுவானதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என 2005 இல் இடம்பெற்ற ஐ.நா. உயர் மட்டக் கூட்டத்தில் 190 நாடுகள் உறுதியெடுத்திருந்தன.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான விரைந்த செயற்பாடு லிபியா விவகாரத்தில் நடைமுறைப்பட்டது. ஏலவே எச்சரிக்கப்பட்டிருந்த போதும் 2009 இல் இலங்கைத் தீவில் ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் நடந்தேறிய அவலமான பேரழிவினைத் தடுக்கத் தவறிவிட்டன.

இறுதிக் கட்டப் போரின் போது நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால் அனைத்துலக சமூகம் இரண்டு மூலக் காரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின.

இரண்டாவது காரணி, பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக பேõரின் விளைவு, விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமையாகும்.

நோர்வேக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதேவேளை, அதன் வகிபாகம் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது மிக அவசியமானது என்றார்.

புத்தரின் அவதாரங்களைச் சித்திரிக்கும் 28 சிலைகளும் பலாலியில் பிரதிஷ்டை

பலாலியில் உள்ள யாழ். மாவட்ட பாதுகாப்புப்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள விகாரையில் புத்தபெருமானின் 28 அவதாரங்களையும் எடுத்துவிளக்கும் 28 புத்தர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தையொட்டி இந்தச் சிலைகள் விமானம் மூலம் பலாலிக்கு எடுத்துவரப்பட்டு அங்குள்ள விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பலாலிப் படைத் தலைமையகம் தெரிவித்தது.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் விகாரையை அண்டிய அரச மரம் ஒன்றைச் சுற்றி ஏழு பக்க வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்ட இடத்திலேயே அவை வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் நான்கு புத்தர் சிலைகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்கவின் சிந்தனையின் பிரகாரமே 28 புத்தர் சிலைகள் கொண்ட விகாரை அமைக்கப்பட்டுள்ளது.புத்த  பகவானின் 28 அவதாரங்களையும் வெளிப்படுத்தும் விதமாகவே 28 புத்தர் சிலைகள் அந்த அவதாரங்களின் பெயர்களுடன் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

வெண்ணிறத்தினாலான அந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் ஓர் அடி உயரமானவை ஆகும். இந்தச் சிலைகள் அனைத்தும் அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. அவை வேறு எங்கும் எடுத்துச் செல்லப்படமாட்டா.இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் 18 சிலைகள் யாழ். மாவட்டத்திலுள்ள படைத்தளபதிகளாலும் ஏனைய 10 சிலைகள் படைத் தலைமையகங்களாலும் வழங்கப்பட்டவை. இது குறித்த விவரக் குறிப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லில் தீட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவல்களை எமது செய்தியாளரிடம் பலாலி ஊடகப் பிரிவின் அதிகாரி ஒருவர் விவரித்தார்.

Wednesday, May 11, 2011

இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சு: ஜனாதிபதி

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இதுவரை பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்துமுடிந்துள்ளன.

இன்னும் சில தினங்களில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அந்த வகையில் அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் தீர்வுகாண்பது குறித்து பேச்சு நடத்தப்படும்.

அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை.

குற்றம் இழைக்காத எமக்கு எவரும் மரண தண்டனை வழங்க முடியாது. வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் சரியான எண்ணிக்கை எவர் வசமும் இல்லை. அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதனை கண்டறிவதற்காக நாம் அடையாள அட்டைகளை அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்க முயன்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதர கட்சிகளும் இது மனித உரிமையை மீறும் இராணுவ அடக்கு முறை என்று கண்டித்ததன் காரணமாக அம்முயற்சியை அரசாங்கம் கைவிட்டது. அதனை நாம் அன்று செய்திருந்தால் இப்போது வன்னிப் பிரதேசத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதனை துல்லியமாக கூறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.

1981 ஆம் ஆண்டுக்கு பின்னர் வட பகுதியில் இருந்து எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அதன் காரணமாக அவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாதுள்ளது. பயங்கரவாத யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டவர்களுடன் போரிடவில்லை. எமது நாட்டு பிரஜைகளை பாதுகாக்கவே போரிட்டனர்.

அதனால் அவர்கள் இந்த யுத்தத்தின்போது மனித உரிமைகளை மீறி நடக்கக்கூடாது என்பதற்காக விசேட அறிவுறுத்தல்கள், வகுப்புக்கள் என்பவற்றை படையினருக்கு வழங்கினோம். இதனால்தான் யுத்தத்தின்போது பொது மக்களை இராணுவத்தினர் மரணத்திலிருந்தும் காப்பாற்றினர் என்றும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், கெஹெலிய ரம்புக்வெல, நிமால் சிறிபால டி. சில்வா மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில் ,

கதறியழுத பெண்

வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த சமயம் தமிழ் பெண் ஒருவர் இராணுவத்தினரை பார்த்து எங்களை காப்பாற்றுங்கள், புலிகள் எங்களை படுகொலை செய்கிறார்கள் என்று கதறியழுதார். யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, கூட்டமைப்பின் பெரும்பாலான எம்.பி. க்கள் வெளிநாடுகளில் இருந்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் மாத்திரமே வன்னியில் தங்கியிருந்தார். அவர் அரசாங்க தரப்புக்கு வந்துகொண்டிருந்த சமயம் 600 பொது மக்களை புலிகள் சுட்டுக்கொன்றதை தான் நேரில் கண்டதாக கூறியிருக்கிறார்.

ரஷ்யா, சீனா ஆதரவு

தருஷ்மன் அறிக்கை ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக ரஷ்யாவும் சீனாவும் இலங்கையை முழுமையாக ஆதரிக்கின்றன. அதேபோன்று உலகின் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன. நாம் யுத்தக் குற்றங்கள் எதனையும் இழைக்கவில்லை. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதனை முழு உலகுக்கும் எடுத்துக்காட்டவேண்டும். அப்போது இது வலுவிழந்துவிடும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் பதுங்கு குழிகளில் பெருந்தொகை அரிசி, கோதுமை மா மூடைகளை கண்டுபிடித்தோம். இதிலிருந்து நாம் மக்களுக்கு எவ்வளவு தொகை உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம் என்பது புலனாகும் என்றார்.

தருஷ்மன் அறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்தியா எப்போதும் எமக்கு சார்பாகவே உள்ளது. இந்தியாவின் ஆதரவு எப்போதும் எமக்கு உள்ளது. அதேவேளை, தென்னிந்தியாவில் சிற்சில பிரச்சினைகள் இருந்துவருகின்றன என்று கூறினார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்நிலையில் அமைச்சர் பீரிஸ் கூறுகையில், தருஷ்மன் அறிக்கை ஒருதலைப்பட்சமானதாகும். இது தொடர்பில் நாம் இந்தியாவுடன் பேசிவருகின்றோம். இந்தியா எமக்கு ஆதரவாகவே செயற்படுகின்றது. நாம் தருஷ்மன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொள்ளும் நற்பணிகள் குறித்தும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்துவரும் மனிதாபிமான பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பிவைப்போம் என்றார்.

இதேநேரம் இடையில் குறுக்கிட்ட ஜனாதிபதி, இதுவொரு வரவேற்கத்தக்க விடயமாகும். யுத்தத்தின் இறுதி வாரங்களில் நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றி வெளிநாடுகளில் உள்ள எமது தூதுவர்கள் எடுத்துக்கூறுவார்கள். ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கையின் வதிவிட பிரதிநிதி நீல் புனே எமது மனிதாபிமான நடவடிக்கைகளை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் நாம் ஏற்கனவே அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனிதாபிமான, நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபர் தலைமையில் ஒரு சிரேஷ்ட குழுவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு

இதேவேளை, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை காலதாமதமின்றி வெளியிடலாம்தானே ? அவ்வாறு வெளியிட்டால் அது தருஷ்மன் அறிக்கைக்கு ஈடாக இருக்கும் அல்லவா? என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி தருஷ்மன், அறிக்கை போன்று ஆதாரமற்ற ஒருதலைபட்சமான ஒரு அறிக்கையாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமையக்கூடாது என்பதால், அதனை நல்ல முறையில் தயாரிக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை மேற்கொண்டுவருகின்றது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவில் உள்ளன என்று பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இது குறித்து பேராசிரியர் பீரிஸ் பதிலளிப்பபார் என்றார்.

கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை

அமைச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், நாம் கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி முடித்திருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் அவர்களை சந்தித்து பேசுவோம் என்றார். இந்நிலையில் ஜனாதிபதி குறுக்கிட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் கட்சி உட்பட சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறøவேற்ற நாம் முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

வட மாகாண சபை தேர்தல்

மேலும் வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதலளிக்கையில், கிழக்கு மாகாணத்தை போன்று வடக்கில் தேர்தலை நடத்துவோம். யுத்தம் காரணமாக குடிபெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னர் அங்கு புதையுண்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றியபின்னர் வட பகுதி மக்கள் தொடர்பான புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 1980 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பே தற்போதும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். இன்றேல் தேர்தல் முடிவுகள் வெளிவரும் பட்சத்தில் அதனை கம்ப்யூட்டர் ஜில்மாட் என்று கூறுவார்கள் எனத் தெரிவித்தார்.

இந்திய குழுவினரின் விஜயம்

இந்திய குழுவினரின் விஜயம் குறித்து கேள்வியெழுப்பியபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இவை அனைத்தும் நட்புறவுடன் கூடிய இராஜதந்திர விஜயங்கள் என்று குறிப்பிட்டார். இதேவேளை இதுவரை இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லையே என்று வினவியபோது, நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றால் அது ஆதரவு என்றுதானே அர்த்தம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நோர்வேயில் உள்ள அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தமக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் மற்றும் இராணு>வ அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தகவல் வழங்கினால் நடவடிக்கை

ஊடகவியலாளர்களுக்கு தீங்கிழைக்கும்போது அவற்றை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கின்றது. இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென ஜனாதிபதியிடம் வினவியபோது, அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், சமீபத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று இதர ஊடகவியலாளர்களும் எமக்கு தகவல்களை வழங்கினால் நாம் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். ஊடகவியலாளர்கள், சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பில் புகார் செய்தால் மாத்திரமே எம்மால் தாக்கிய நபரை கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ முடியும்.

கீத் நோயார், உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்கள் தம்மை தாக்கியவர்களை எமக்கு கூறினால் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாத பட்சத்தில் எம்மால் என்ன செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தனியார் ஓய்வூதியம்

இந்நிலையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடகத்துறையை சேர்ந்தவர்களின் நிலை என்ன என ஆசிரியர் ஒருவர் கேட்டதற்கு, ஜனாதிபதி பதிலளிக்கையில், ஊடகத்துறையினருக்கு என தனியான ஓய்வூதியம் என்று இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாகவே இது அமையும். இது தொடர்பான நிதிக்கு உத்தரவாதமாக அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

உண்மையில் இது தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனை உடன் நடைமுறைப்படுத்துமாறு வீதியில் இறங்கி போராடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இதற்கு மறு தலையாகவே அனைத்து காரியங்களும் இடம்பெறுகின்றன. தனியார் துறை ஊழியர்கள், வெளிநாட்டில் பணி புரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் என மூன்று ஓய்வூதிய திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனால் வயோதிப காலத்தில் அரச ஊழியர்கள் பெறுவது போன்று தனியார் துறையினரும் அதனை பெற்று நிம்மதியாக வாழலாம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பி.யும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியை நாம் சூறையாடப் போவதாக கூறி தவறான பிரசாரங்களில் ஈடுபடுகின்றன. இத்தகைய அரசியல் இலாபம் கருதிய போலிப் பிரசாரங்கள் வருந்தத் தக்கவையாகும். தனியார் துறை நிறுவனங்கள் தமக்கென புறம்பான ஊழியர் சேமலாப நிதியங்களை வைத்து அந்தப் பணத்தை கம்பனியின் இதர தேவைகளுக்கு பயன்படுத்துகின்றன. இது தொடர்பில் பல்வேறு ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார்.

Tuesday, May 10, 2011

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.


கடந்த காலத்தில் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றதாகவும் இதன்போது பல வழி முறைகள் பின்பற்றப்பட்டதாகவும் வாக்காளர்களாக பதிவதற்கு தவறியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அந்த வகையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் குகநாதன் கூறினார்.


இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில் 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடைந்தால் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தற்போதைய நிலைமையில் யாழ். மாவட்டத்திலிருந்து ஒன்பது பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரம் எம்.பி. க்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையினால் குறைவடையலாம் என்று கருதப்படுகின்றது.


எனினும் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட குகநாதன் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்கிடையில் பல தடவைகள் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படும். அந்த வகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த அளவில் குறைவடையும் என்று கூற முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணையாளரே எடுப்பார் என்று கூறினார்.

கூட்டமைப்பு-அரச தரப்பு பேச்சுகளில் முஸ்லிம் தரப்புக்கும் இடம்வேண்டும்; பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

 
news
 யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதிப்புக்கு உள்ளான ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பேச்சுகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவர் கூறியவை வருமாறு:
உலகம் பூராவும் நடைபெற்ற சகல பேச்சுகளிலும் பகிரங்கத் தன்மை பேணப்படாத பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை வரலாறாகும். பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள இரு தரப்புகளுடனும் பேச்சுகள் நடைபெறுகின்ற பொழுது அது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.  மக்களுக்குத் தெரியப்படுத்தப்படாத பேச்சுகள் சட்டபூர்வமான பேச்சுகள் அல்ல. பேச்சுகளின் விவரங்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகமாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின்போது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களில் எந்தத் தோல்வியும் இடம்பெறவில்லை என்றும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில் காணப்பட்ட உடன்பாடுகளால் பேச்சுகள் தோல்வியடைந்தன என்றும் பஷீர்சேகுதாவூத் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலக முஸ்லிம் இளைஞர் தொழுகையினதும் கல்வி அபிவிருத்தி அமைப்பினதும் ஏற்பாட்டுக் குழு ஒழுங்கு செய்திருந்த ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்.மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் விவரங்களை இரகசியமாக வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் கல்வியில் எவ்வாறு ஒரு பகிரங்கத் தன்மை தென்படுகிறதோ அவ்வாறு இந்த நாட்டின் அனைத்து விடயங்களிலும் பகிரங்கத் தன்மை அவசியமாகும். விசேடமாகப் பேச்சுகளில் பகிரங்கத் தன்மை மிக முக்கியமானது. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுகள் முடிவுற்று,  மீளவும் ஆரம்பிக்கப்பட்ட யுத்தமும் முடிந்துள்ள நிலையில், தமிழ் மக்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற, தமிழர் தரப்பு ஜனநாயக சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசு பேச்சுகளை நடத்துகிறது.
 
யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்த நாட்டில் எல்லா விடயங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நியதி. வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறுவதற்கு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் யுத்தம் பரவியிருந்த காலத்தில் சகல மக்களும் எவ்வித இன, மத, பிரதேச வேறுபாடுகளுமின்றி அச்சத்துடன் வாழ்ந்தார்கள்.
 
இந்த அச்சம் அகன்று நிம்மதியான வாழ்வு கிடைத்திருக்கின்ற சூழ்நிலையில் இந்த நாட்டை முன்னேற்றுவதாக இருந்தாலும், நாட்டின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து ஒன்றுபட்ட சமுதாயங்களாகவும், சமத்துவம் உள்ள மக்களாகவும், இலங்கையர் என்ற உணர்வுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர், மலாயர், மலையக மக்கள் அனைவரும் வாழவேண்டுமாக இருந்தால் பகிரங்கத் தன்மையும், சமத்துவமும், கல்வி முன்னேற்றமும் மிகமிக முக்கியமானவை.இப்படி அவர் கூறினார்.

Monday, May 9, 2011

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கோரிக்கைகளை யாழ் பிரதேச செயலாளர் அமைச்சருக்கு விளக்கிக்க்கூறினார், அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், இனிவரும் காலங்களில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் யாழ் பிரதேச அபிவிருத்திக்குழுவில் நிரந்தர அங்கத்துவத்தை வகிக்கும் என்றும் பிரதேச செயலாளர் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்,
யாழ் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் நிதிஒதுக்கீடு செய்யும் போது அதை சரியான முறையிலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். காணியில்லாதவர்களுக்கு அரச  காணிகள் மற்றும் கோயில் காணிகள் உள்ளிட்ட பொதுவான காணிகளை பகிர்ந்தளிக்கப்படுவதற்கேற்ற நடவடிக்கைகள் துறைசார்ந்தோர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன் யாழ் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் மூலமாக வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா இதுவரையில் கிடைக்கப்பெறாதவர்களுக்கு கிடைக்கவும் வழிசமைக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

வீட்டுத்திட்ட நடைமுறைகள் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கேற்பவே முன்னெடுக்கப்படுமெனவும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் விகிதாசாரத்தை கருத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் மேலதிகமாக செயற்பட வேண்டிய வடிகால் சீரமைப்புக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மீள்எழுச்சித்திட்டம் ஆளுமை விருத்தி செயற்பாட்டுத்திட்டம் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் காசுக்கான வேலைத்திட்டம் வீட்டுத்திட்டம் வீதி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. இதில் ஈ,பி.டி.பி. பாரர்ளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சரவணபவன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

Sunday, May 8, 2011

யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி: நோர்வே தூதுவர்

யாழ். மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கலை கலாசார விழாவில் தான் கலந்துகொண்டதாகவும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்வுகளில் யாழ், வன்னி மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான கலைப்படைப்புக்களைத் தாம் மெய்மறந்து ரசித்ததாகவும் குறிப்பிட்ட அவர், யாழ் பொது நூலகம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையே காணக்கூடியதாக இருந்ததாகவும் தற்போது சிறந்ததொரு சாதகமான சூழ்நிலையில் அம்மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள வசந்தபுரம் பகுதியில் 6 லட்சம் ரூபா பெறுமதியான 50 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் தவிர முன்பள்ளி, பொதுமண்டபம் உள்ளிட்ட பொது வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நோர்வே அரசு தயாராக இருப்பதாகவும் இதன் போது நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை மேம்படுத்தல், தனியார் துறையினை விருத்தி செய்தல், இசைத் தொடர்பு பாரம்பரியத்தை பேணுதல், வடகடல் (சீநோர்) தொழிற்சாலையை நவீன மயப்படுத்தல் மற்றும் கண்ணிவெடிகள் அகற்றுதல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் முழுமையான பங்களிப்பை வழங்கும் எனவும் நோர்வே தூதுவர் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்ப்பு அரசியலால் அல்லாமல் இணக்க அரசியல் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அழிவு யுத்தத்தினால் அவலப்பட்ட எமது மக்களின் துன்ப, துயரங்களுக்கு தீர்வு காணப்படும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு ஆற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வாழைச் செய்கையை அபிவிருத்தி செய்வது மட்டுமன்றி யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் இந்தியாவின் துறைசார்ந்த தொழிற்துறை நிபுணர்களுடாக வாழைநார் சார்ந்த பல்வேறு சுயதொழில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்த அவர் வட பகுதியில் தமது பூர்வீக இடங்களில் முஸ்லீம் மக்கள் மீளக்குடியேறுவதற்கு தாம் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், வட பகுதியிலும் ஏனைய சில இடங்களிலும் அவ்வப்போது நடைபெறுகின்ற சமூக விரோத செயல்களுக்கு எமது கட்சியின் பெயரை சில ஊடகங்கள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றமை வேதனை அளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை நோர்வே அரசு தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் எனவும், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தித்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்ட உதவித் திட்டங்களைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் நோர்வே தூதுவரிடம் அவர் கேட்டுக்கொண்டார். இன்றைய இந்த சந்திப்பில் நோர்வே தூதுவரின் மேலதிக செயலாளர் சொன்றே பியோட் வீற் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.

யாழ். காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி


யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான உடன்படிக்கை விரைவில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த யுத்த காலத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகம் கைவிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு காணப்படுகின்ற 10 கடல் வழி உட்காவுகை வாயில்களில், காங்கேசன்துறை துறை முகமும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வடக்கில் இருந்து தெற்குக்கான பொருள் மற்றும் பயணிகள் பறிமாற்றத்துக்கும் இந்த துறைமுகம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Saturday, May 7, 2011

யாழ். தேவி புகையிரதம் ஓமந்தைவரை

வவுனியா தாண்டிக்குளம் வரை சென்ற யாழ். தேவி புகையிரதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஓமந்தை ரயில் நிலையம் வரை செல்கிறது.

வவுனியாவிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தாண்டிக்குளம் வரை யாழ். தேவி ரயில் சென்றது. 30 வருடங்களின் பின் முதல் முறையாக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்தேவி ஓமந்தை வரை செல்கிறது.

தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான 10 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்கு ரயில்வே திணைக்களம் 450 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது.

வடக்கில் துரித அபிவிருத்திக்கு நெல்சிப் திட்டத்தின் ஊடான செயற்பாடுகள்

06.05.2011 - வெள்ளிக்கிழமை

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலுடனும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் தெரிவித்தார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (6) நடைபெற்ற உள்ளூர் சேவை மேம்பாட்டுத் திட்ட அமுலாக்கல் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நெல்சிப் திட்டத்தின் கீழ் மாகாண சபைக்கூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்காக அரசாங்கம் அதிகளவான நிதியினையும் செலவிட்டு வருகின்றது.

இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு மக்களது ஒத்துழைப்பும், ஒத்தாசையும் அவசியமானது என்பதுடன் யாழ் மாவட்டத்தில் நெல்சிப் திட்டத்தின் மூலம் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கூடாக தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 34 வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சகல பிரதேச சபைகளும் ஒருங்கிணைந்து தமக்கான பணிகளை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த தலைமைத்துவத்துடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலுடனும் வடக்கின் வசந்தம் ஊடாக யாழ் மாவட்ட மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் வடமாகாண பிரதம செயலாளர் சிவசுவாமி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு சிறப்புரையாற்றும் போது உலக வங்கியிடமிருந்து இலங்கை அரசு கடன்பெற்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டமே நெல்சிப் திட்டம் எனவும் இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 42 வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக 3626.44 மில்லியன் ரூபாவை அரசு நன்கொடை அடிப்படையில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 1084 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மிகுதித் தொகை கட்டம் கட்டமாக கிடைக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

அரங்கில் ஆளுநர் மற்றும் அமைச்சர் ஆகியோர் மலர்மாலை அணிவிக்கபட்டும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளுக்கூடாக நெல்சிப் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் உப கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான உறுதிப் பத்திரங்களை துறைசார்ந்தோருக்கு அமைச்சர் ஆளுநர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சிவசுவாமி வடமாகாண ஆளுநரின் செயலாளர் ரங்கராஜா யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Friday, May 6, 2011

யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பிலிருந்து 4 இலட்சத்து 30 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்படும்?

யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பு மீளாய்வின் படி 2009 ஆம் ஆண்டு இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதாக யாழ்.தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின் படி 2009 ஆம் ஆண்டு இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதுடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் 2010 ஆம் ஆண்டுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இம் மாதம் 31 ஆம் திகதியே வெளியாகுமென திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; 2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது. இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகளில் 90 வீதமானவை நிறைவு பெற்றுள்ளன. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுவிடும்.

புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் (குறிப்பாக யாழ் மாவட்ட முஸ்லிம்கள்) எனப் பல்வேறு காரணங்களால் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளனர். மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் இந்தப் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர். இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வருமென்றும் தெரிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 இலட்சத்து 16 ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வேலை வாய்ப்புக்கான கருத்தரங்கு

 தேசிய தொழிற்றகைமைச் சான்றிதழ் வழங்கும் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ்.கிளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதற்கான கருத்தரங்கொன்றினை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் கைதடி பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்.கிளை நடைமுறைப்படுத்தவிருக்கும் உயர்தொழிற்பயிற்சி கற்கை நெறியில் மாணவர்களை இணைத்துக்கொள்ள முன்பதிவுகள் இடம்பெறவிருப்பதால் அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.கிளை இணைப்பாளர் இரா.அகிலன் வேண்டியுள்ளார்.

இப்பயிற்சி நெறியில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த வெளிமாவட்டங்களில் வசிப்போரும் கலந்துகொள்ளும்படியும், யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தப்படப்போக்கும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பாக அறிந்துகொள்ளும்படியும் யாழ் மாவட்ட முஸ்லிம்களை சம்மேளனத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

அஸ்மின் அய்யூப்-
பொதுச்செயலாளர், யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

Thursday, May 5, 2011

யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே பண்பாட்டு மாற்றமே முதன்மையாக அவசியப்படுகின்றது.


1990ல் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே பண்பாட்டு ரீதியான மாற்றங்களை 20 வருடங்கள் கடந்தபின்னரும் இன்றுவரை குறைந்தளவிலேயே அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இது வருத்தப்படவேண்டிய விடயமே. எமது சிந்தனைப்பாங்கு, நாம் விடயங்களை அணுகும் முறை, எமக்கும் எமது உறவுகளுக்கும் இடையில் நிலவும் மேலோட்டமான உறவுகள், மற்றவரை நாம் அணுகும் விதம் போன்ற முக்கியவிடயங்களில் எம்மிடையே ஒருவித பலவீனம் நிலவுவதை நாம் உனருகின்றோம், இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவிதத்தில் எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் அமைந்துவிடுகின்றன, இவ்வாறான நடவடிக்கைகளால் எமது சமூக அமைப்பு மிகவும் பலவீனப்பட்டுப்போகின்றது. எனவே எமது மக்களின் சிந்தனைக்காக ஒரு சில வார்த்தைகள் இங்கே,
நாம் எல்லோரும் மிக நீண்டகாலம் அகதிவாழ்வால் அவஸ்த்தைப்பட்டோம், எமது சமூக ஒழுங்கில் வறுமை நிரந்தர நண்பனாகிவிட்டது, கல்விக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன, கற்றவர்களும் எம்மைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள், இவ்வாறான நிலையில் நாம் இஸ்லாத்தைவிட்டும் தூரமாகிவிட்டோமா என்ற சுயவிசாரனை எமக்கு அவசியப்படுகின்றது.
இஸ்லாம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விட்டு மற்றவர்களையே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்புகின்றனர். தொல்லையும் துன்பமும் நேரும்போதுஅவர்கள் அல்லாஹ்வை விட்டும் தூரமாகின்றார்கள், இயற்கை அனர்த்தம் ஆபத்துகள் ஏற்படும்போது மட்டும் அவர்கள் இறைவனின் உதவியை நாடுவார்கள். நன்மைகள் கிட்டும்போதும் அல்லது அவர்களுக்கு ஏதாவது இலாபம் கிடைக்கும்போது அவர்கள் அல்லாஹ்வை மறந்துவிடுகின்றார்கள் தன்னுடைய செயல்களுக்குத் தான் கணக்குக் கொடுத்தாக வேண்டுமென்றும், தன்னுடைய தீயச்செயல்களுக்குத் தண்டனை அனுபவித்தாக வேண்டுமென்றும் நம்பாத ஒருவன் தன்னுடைய ஆசாபாசங்களுக்கு அடிமையாகி முற்றிலும் தன்னலம் நாடுபவனாகவே விளங்குவான்.இத்தகைய உளப்பாங்கு மனிதனை சுயநலவாதியாக மட்டுமே தொடர்ந்தும் வைத்திருக்கும் இதனை எமது சமூகத்தில் இன்று நாம் காணுகின்றோம்.
எமது சமுதாயத்தில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஏராளமாகக் காட்டவியலும். உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், புகழ்பெற்றிருந்து, இப்போது புகழ் மறைந்து மக்களின் கவனத்தைக் கவரும் நிலையில் இல்லாதவர், நஷ்டமைந்துவிட்ட பணக்காரன் ஆகியோரிடமிருந்து மக்கள் விலகி விடுகின்றார்கள். நன்றி கெட்டவர்களைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகின்றோம், பங்காளிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதைக் காண்கிறோம். வட்டி ஆதிக்கம் செலுத்தும் உறவுகளில் எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளையும் காணுகின்றோம், எங்கும் பொய் மலிந்திருக்கின்றது, தமக்கு தேவையில்லாத விடயங்களின் பால் மக்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள், அன்றாட வாழ்க்கையில் பணமே மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
நட்புறவிலும் துரோகம் வெகு சாதாரணமாக ஊடுருவி காணப்பெறும் ஒரு சமுதாய நிகழ்வாகி விட்டது. ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் மக்கள் தங்களின் மிக நெருங்கிய நண்பர்களையும் விட்டு விலகிச் சென்று ஆதாயம் விளையும் புதிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய காரணங்களுக்காக அநேக மக்கள் தங்கள் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுகளிலும் இதுவேதான் உண்மை. அற்ப காரணங்களுக்காகக் கணவன் மனைவியை விட்டும், மனைவி கணவனை விட்டும் பிரிந்து சென்று விடுகிறார்கள். தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாக, தாங்கள் இழைத்த தீயச் செயல்களை யாரும் பார்க்கவில்லை என்பதற்காக அவை என்றுமே மறைவாகவே இருக்கும் என்று எண்ணி இவ்வளவு பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை அத்தீயச் செயல்களினின்றும் தடுப்பவர் யாரும் அல்லது தடுப்பது எதுவும் எமது சமூகத்தில் இல்லை. ஆகச் சுருங்கச் கூறுமிடத்து ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் நம்பிக்கைத்துரோகமும் வஞ்சகமும் நிறைந்து ஒருவரோடு ஒருவர் தீய உள்நோக்கத்துடனேயே பழகுகின்றனர்.
மார்க்கப் பண்புகளைப் பேணாதவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும் கூட பாசமின்றியும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள் என்பது தெளிவாகிறது. கடமை உணர்வின்மை மனித உறவுகளை எல்லாம் சீர்குலைக்கிறது. மனித ஆன்மாவில் குழப்பத்தையும் கேட்டையும் விளைவிக்கின்ற இந்தச் சமுதாயக் சீர்கேடு மார்க்கப் பண்புகளைப் பேணுவதன் மூலமே களையப்படும். இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும்போது மக்கள் மற்றவரை பயனற்றவர்களாகக் கருத மாட்டார்கள். மனிதனுக்குச் சிறப்பைத் தருவது நிச்சயமாக அவனுடைய அழகிய தோற்றமும் செல்வ வளமும் பதவியும் அல்ல. அவனுடைய இறையச்சமும் ஓழுக்க மேம்பாடுமே அவனை மதிப்புமிக்கவனாக்கும் பண்புகள். மனிதனுக்கு வழங்கப்பட்ட இம்மை வாழ்வு அவனைச் சோதனைக்குள்ளாக்குவதற்காகவே. இவ்வுலகில் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு மனிதன் நிரந்தர வீடாகிய மறுமையை அடைவான். மறுமையில் அவனுடைய ஒழுக்கப் பண்புகளை கணக்கிடப்படும். எனவே நற்பண்புகளே பலனளிக்கும். இறைவன் அவனுடைய அடியார்கள் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக வாழும்படி வலியுறுத்துகின்றான். இவ்விதம் வாழ்வதன் மூலமே இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
துன்பமும் பிரச்சினையும் எழும் காலங்களில் பேணப்படும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் இறை நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும். கீழ்வரும் நபிமொழி இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கடமையுணர்வை எடுத்துரைக்கிறது.
முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புஹாரி, முஸ்லிம்)
எனவே இத்தகைய நல்ல சமுதாய அமைப்பு உருவாக்கப்படாதவிடத்து எமது சமுதாயம் மேலும் மேலும் பலவீனப்பட்டு சின்னாபின்னமாகிவும், எமது மீள்குடியேற்ற செயற்பாட்டில் முதன்மையாக பண்பாட்டுரீதியான மாற்றத்துக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். மாற்றம் என்பது எம் ஒவ்வொருவரிடமும் உருவாகவேண்டும், மாற்றத்தின் ஆரம்பம் நானாக இருப்பேன் என்று நாம் உறுதிபூணவேண்டும்.
இணையத்தில் இதனைப்படிப்பவர்கள் தமது கலந்துறையாடலுக்குரிய விடயமாக இதனை அமைத்துக்கொள்ளுங்கள் உங்களது மேலான கருத்துக்களையும் இங்கே பதிவிடுங்கள்.
நன்றி

Monday, May 2, 2011

இந்திய அரசின் வீட்டுத் திட்டப் பணிகள் குடாநாட்டில் அடுத்த வாரம் ஆரம்பம்; யாழ்.அரச அதிபர் நேற்றுத் தெரிவிப்பு

 
இந்திய அரசின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் யாழ். மாவட்டத்தில் அடுத்தவாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 7,400 வீடுகள் கட்டப்படவுள்ளன.
 
இந்திய அரசின் வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பெயர்கள் தமக்குக் கிடைக்காமையினாலே குறித்த பணிகள் தாமதமடைந்து வருவதாக இந்தியத் தூதர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிபர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நாம் பயனாளிகளின் பெயர் விவரங்களை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டோம். அதனடிப்படையில் தற்போது வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.முன்னோடியாக புதிதாக 150 வீடுகளும், புனரமைப்பு என்ற வகையில் 2 ஆயிரம் வீடுகளும் மேலும் புதிதாக கட்டிக்கொடுக்கும் வகையில் 5 ஆயிரத்து 250 வீடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளன.பயனாளிகள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட, பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டனர் என்றார் அவர்.இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா இந்திய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லை நட்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    
 
03 மே 2011, செவ்வாய் 7:20 மு.ப (UTHAYAN ONLINE)

Sunday, May 1, 2011

யாழ், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் சம்மேளனம்- 2011 மே மாதத்திற்கான ஒன்றுகூடல் – பொதுமக்களுக்கான அறிக்கை

அல்லாஹ்வின் நாமம் கொண்டு தொடங்குகின்றோம்,
யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 2011 மே மாதத்திற்கான பொதுக்கூட்டம் இன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை 01-05-2011 அன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் காலை 10 மணிமுதல் பிற்பகல 2.30 வரை சம்மேளனத்தின் தலைவர் சகோ.எம்.யூ.எம். தாகிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

29 சம்மேளன அங்கத்தினர்களையும் மூன்று புதிய அங்கத்தவர் விண்ணப்பதாரிகளையும் உள்ளடக்கியே கூட்டம் இடம்பெற்றது, பல்வேறு விடயங்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டன. 

மீள்குடியேற்ற செயற்பாட்டில் காணப்படும் சவால்கள் குறித்த விடயம் முக்கியத்துவம் பெற்றது, மீள்குடியேற்ற செயற்பாட்டினை அறிவியல் சார்ந்த திட்டமிடலுடன் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து வெகுவாக வலியுறுத்தப்பட்டது. சம்மேளனத்தின் நோக்கம் மீள்குடியேற்றத்திற்காக செயற்படும் அமைப்புகளை ஒருங்கிணைப்பதுவே தவிர மீள்குடியேற்றத்தை நேரடியாக மேற்கொள்வதல்ல என்பதாகவே ஆரம்பத்தில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றது. யாழ் சமூகத்தில் இயங்கும் அமைப்புகள் பல  மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவான செயற்பாடுகளை கொண்டனவாக இல்லை எனவே சம்மேளனம் மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடி செயற்பாடுகளை திட்டமிட்டு முன்வைக்க வேண்டும் அதற்கு ஏற்றவகையில் சம்மேளனத்தின் கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்படவேண்டும் என்பதாகவும் பலர் கருத்துக்களை முன்வைத்தனர். மேற்படி விடயங்கள் தீவிர வாதப்பிரதிவாதங்களுக்கும் கலந்துறையாடலுக்கும் உட்படுத்தப்பட்டது, அதன் முடிவில் பின்வரும் மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டன

மக்கள் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், சமூகரீதியான விடயங்களை ஒழுங்குபடுத்தவுமென பின்வரும் நபர்களைக் கொண்ட உப செயற்குழு அமைக்கப்பட்டது.
சகோ.எம்.ஜீ.பஷீர், சகோ.தையூப், சகோ, சுப்ஹான், சகோ.ஸியாத், சகோ,ஸினாஸ், சகோ,ஜினூஸ்.
திட்டமிடல் மற்றும் பொது உறவு சார்ந்த பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடல் பொது உறவுக்கான உப செயற்குழு பின்வருவோரைக்கொண்டு அமைக்கப்பட்டது.
சகோ.அமீன், சகோ.றமீஸ் (சட்டத்தரணி) சகோ.அஜ்மல், சகோ,ரொஷான், சகோ.சுனீஸ், சகோ.பஸ்லின், சகோ.அஸ்பர், சகோ.முஜாஹித், சகோதரி ஷர்மிளா, சகோதரி, றமீஸ் பாதுஷா
அபிவிருத்தி சார்ந்த அரச , தனியார் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பின்வருவோர் கொண்ட அபிவிருத்திக்கான உப செயற்குழு அமைக்கப்பட்டது.
சகோ.எம்.யூ,எம், தாஹிர், சகோ,ஜமால், சகோ, நியாஸ், சகோ,நஸ்ரூன், சகோ,நஜீப், சகோ,யஸ்ரின், சகோ,நிபாஹிர், சகோ,அஷ்கர், சகோ,முஸ்தபா, சகோ.நிலாம்,
மேற்படி உப குழுக்களை இணைக்கின்ற வகையிலும் அவற்றுக்கிடையேயான பரஸ்பர இயக்கம் தொடர்பிலும் சம்மேளனத்தின் செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் கடமையாற்றுவார்கள்.

சம்மேளனத்தின் புதிய கட்டமைப்பு தொடர்பாக அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் உத்தேச முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் பெறப்படும் என்றும் கூறப்பட்டது.

காணியற்றோருக்கு காணிகளை சகாய விலைகளில் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முதற்கட்ட செயற்திட்டம் எதிர்வரும் மே 7ம் திகதி மேற்கொள்ளப்பட ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்மேளனத்தின் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு இடம்பெற்றது. அதன்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோ.அல்ஹாஜ் அமீன் அவர்களது பெயர் சபையோரால் பிரேரிக்கப்பட்டது, அப்போது இணைப்பாளர் சகோ.முபீன் அவர்கள் அரசியல் கட்சி சார்புடையோரை தலைவராக நியமிக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தார், இக்கருத்து சம்மேளன நடைமுறைகளுக்கு ஒவ்வாத கருத்து எனவும் அவ்வாறு அரசியல் ஈடுபாடுடையோரை நியமிக்காமல் இருப்பது பொருத்தமான நடைமுறையல்ல என சபையில் பரவலான கருத்துக்கள் எழுந்தன, அதனைத்தொடர்ந்து சகோ. அல்ஹாஜ் அமீன் அவர்கள் தான் குறித்த திர்வில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார் அதனைத்தொடர்ந்து சபையில் சகோ.ஜமால். சகோ.சுப்ஹான், சகோ.நிலாம் ஆகியோருடைய பெயர்கள் தலைமைத்துவத்திற்காக பிரேரிக்கப்பட்டது, ஏனைய இரண்டு சகோதரர்களும் தாம் தெரிவில் இருந்து நீங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சகோ.ஜமால் அவர்கள் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான (2011- மே,ஜூன்) தலைவரக செயலாற்றுவார், சகோ.ஜமால் அவர்கள் யாப்பாணத்தில் வசிப்பவர் என்பதும் மொஹிதீன் ஜும் ஆப்பள்ளிவாயலின் தர்மகர்த்தா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சம்மேளனத்தின் அடுத்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 05.00 மணிவரை யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் இடம்பெறும். இன்ஸா அல்லாஹ்.

யாழ்ப்பாணம் பெரிய பள்ளியில் அகில இலங்கை தப்லீக ஜமாஅத்தினரின் இஜ்திமா நடைபெறுவதால் குறித்த சம்மேளனக்கூட்டம் சுருக்கமாக நடைபெற்றது என்றும் இதனால் சம்மேளனத்தின் அங்கத்தினர் அனைவரினதும் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க முடியாமல் போனமை குறித்தும் செயலாளர் தமது கவலைகளைத் தெரிவித்துக்கொண்டார்