Sunday, September 25, 2011

யாழ் முஸ்லிம் வட்டாரம்- விசேட ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை ஊடக அறிக்கை








ஹிஜ்ரி 1432- 31 ஆகஸ்ட் 2011 புதன் கிழமை
1990 பலவந்த வெளியேற்றம், 20 வருட அகதி வாழ்வு ஆகியன கழிந்த நிலையில் மீளக்குடியேறும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது ஈதுல் பெருநாள் தொழுகையினையும் ஒன்றுகூடலையும் வெகு சிறப்பாக யாழ், ஒஸ்மானியா வளாகத்தில் கூட்டாக நிறைவேற்றினர், அல்ஹம்துலில்லாஹ்,
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வழிகாட்டலுடன் யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் அனைத்து பள்ளிவாயலகளினதும் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது காலை 7.00 மணிக்கு தக்பீருடன் ஆரம்பிக்கப்பட்டது, மௌளவி ஜிப்ரி, மௌலவி அப்துல் அஸீஸ் ஆகியோருடைய தலைமையின் கீழ் தக்பீர் நிகழ்வுகள் நடைபெற்றன, காலை 7.45 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையினை மௌலவி அப்துல் அஸீஸ் அவர்கள் முன்னின்று நடாத்தினார்கள். ஈதுல் பித்ர் குத்பா பேருரையினை மௌலவி மஹ்மூத் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தினார்கள். ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் பிரிவினையின் பாதகத்தன்மையினையும் கருவாகக் கொண்டு குத்பா உரை நிகழ்த்தப்பட்டது.யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் நல்ல முன்மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது, இதனை பாதுகாக்க வேண்டும் இதனை சிதைக்க செய்தானியத்துகள் முயல முடியும், ஆனால் எவருமே அத்தகைய செய்தானியத்துக்கு இடமளிக்காமல் இத்தகைய நல்ல முன்மாதிரிகளை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி  முன்னெடுக்க வேண்டும். இத்தகைய நல்ல முன்மாதிரிகளுக்கு எவரெல்லாம் முன்னின்று உழைத்தார்களோ அவர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள், அல்லாஹ் அவர்களுடைய மீஸானுல் ஹஸ்னாத்தை பாராமானதாக ஆக்கியருளுவானாகவும். என  தனதுரையினை நிறைவு செய்தார்கள். எதிர்வரும் காலங்களில் ஆண்,பெண் என ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் நடைமுறை மேலும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று ஒரு சிலரால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அல்லாஹ்வின் அருள் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்ற ஈதுல் பித்ர் நிகழ்வுகளின் இறுதியில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களும் பறிமாறப்பட்டன,
கலந்துகொண்ட அனைவரும் முஆனகா முஸாபஹா செய்த நிலையில் மிகவும் மனமகிழ்ச்சியுடன் திடலில் இருந்து கலைந்து சென்றனர்.
தகவல்
அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)
பொதுச்செயலாளர்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

புனித நோன்புப் பெருநாள் தொடர்பான தீர்மானம்


புனித நோன்புப் பெருநாள் தொடர்பான தீர்மானம்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று அதாவது 31 ஜூலை 2011 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிவாயல் நிர்வாகிகளுடனான ஒன்று கூடலில் பினவரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன, அதனை பொதுமக்களின் கவனத்திற்கு தருகின்றோம்.
அல்லாஹ்வின் அருளால் நாம் எமது தாயக மண்ணில் மீளவும் குடியேறத் தொடங்கியுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ் ஒற்றுமையே பலம் என்பதற்கு அமைய எமது சமூக விவகாரங்கள் பல வற்றில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதும் காணக்கூடியதாக இருக்கின்றது, அந்த வகையில் ஒரு பிரதேசத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையினையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவே பெருநாள் தினங்கள் அமைகின்றன, இதனைக்கருத்திற்கொண்ட யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தைச்சேர்ந்த பள்ளிவாயல் நிர்வாகிகள் பெருநாள் தொழுகைகளை ஐக்கியமாக ஒரே இடத்தில் நிறவேற்றுவதற்கு ஏகமனதாக உடன்பாடு கண்டுள்ளார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
அதன்பிரகாரம் ஹி1432 (2011) ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பின்வரும் பொருப்புகள் பள்ளிவாயல் நிர்வாகங்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன
முழுமையான ஏற்பாடுகளுக்கான பொறுப்பாளர்களாக சகோதரர் முபீன் மற்றும் சகோதரர் ஜமால் மொஹிதீன் ஆகியோர் கடமையாற்றுவார்கள்
வுளூ மற்றும் நீர்விநியோக ஏற்பாடுகள் பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் (பொறுப்பாளர் சகோ. அல்-ஹாஜ் நியாஸ்)
தொழுகைக்கான மைதானத்தை தயார் செய்தலும், விரிப்புகளை ஏற்பாடு செய்தலும் மொஹிதீன் ஜும் ஆ  மஸ்ஜித் மொஹிதீன் பள்ளிவீதி பொறுப்பாளர் சகோ.அல்-ஹாஜ் பிர்தௌஸ்)
ஒலிபெருக்கி ஏற்பாடுகள் மொஹிதீன் ஜும் ஆ  மஸ்ஜித் மானிப்பாய் வீதி (பொறுப்பாளர் சகோ லாபிர்)
மறைப்பு ஏற்பாடுகள் மஸ்ஜித் அபூபக்கர், மற்றும் செவல பள்ளிவாயல் (பொறுப்பாளர்- மௌலவி அப்துல் அஸீஸ், சகோ.ஹஸ்ஸான்,)
சிற்றுண்டி விநியோகம் காமால் பள்ளிவாயல் (பொறுப்பாளர், சகோ.தாஹிர், சகோ. லாபிர், மௌலவி றொஷான்)
மிம்பர் மற்றும் முன்னரங்க ஏற்பாடுகள்- அல்லாப்பிச்சை மஸ்ஜித் ( பொறுப்பாளர் சகோ, கமால்)
செய்தி ஒலிபரப்பு, மற்றும் ஊடக விவகாரங்கள் (பொறுப்பாளர் சகோ.அஸ்மின் அய்யூப்)
மேற்படி முடிவினை எல்லாப்பள்ளிவாயல் நிர்வாகங்கள் சார்பாகவும் நாம் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம். சமூக நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்திற்கு பொது மக்கள் அனைவரையும் ஒத்துழைக்கும்படியும் அதன் வெற்றிக்காக பிரார்த்திக்கும்படியும் வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்
பொதுச்செயலாளர்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 2011 ஆகஸ்ட் மாதத்திற்கான பிரதிநிதிகள் கூட்ட அறிக்கை

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 2011 ஆகஸ்ட் மாதத்திற்கான
பிரதிநிதிகள் கூட்ட அறிக்கை
2011 ஆகஸ்ட் மாதத்திற்கான பிரதிநிதிகள் சந்திப்பு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, முன்கூட்டியே 2011 ஜூலை 30ஆம் நாள் சனிக்கிழமை, யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் கூட்டப்பட்டது, நிகழ்வுகள் வழமையான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டன,
ஆன்மீக உரை:
ஆன்மீக உரையில் செயலளார், நாம் எதற்காக ஆன்மீக உரை நிகழ்த்துகின்றோம் என்பதை தெளிவுபடுத்தினார், கூட்டமைப்பு, ஐக்கியம் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்துக்கூறி, மக்கள் பிரதிநிதிகளாகவே நாம் இவ்விடத்திற்கு வருகின்றோம், எமக்கிடையே முரண்பாடுகள் இருக்கின்றன, ஆனால் அதனை அடிப்படையாக வைத்து நாம் பிரிவினைக்கு துணைபோவதில்லை, மக்களின் உணர்வுகளை, சிந்தனையினை ஒருமுகப்படுத்தி ஒரே அமைப்பை ஏற்படுத்துவதற்கே இந்த ஆன்மீக உரை நிகழ்த்தப்படுகின்றது என்ற கருத்தைக்கூறி, சம்மேளனக்கூட்ட மரபுகளில் ஆன்மீக உரை தொடர்ந்தும் இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
தலைமை உரை:
தலைமை உரையில் சம்மேளனத்தின் இதுவரைகால செயற்பாடுகள் குறித்து சுருக்கமாக கூறிய தலைவர், அனைவரது ஒத்துழைப்புக் குறித்தும் வலியுறுத்தினார்.
2நிமிட துஆப் பிரார்த்தனை: இவ்விடத்தில் சகோதரர் எம்.ஜீ பஸீர் அவர்கள்: முன்னை நாள் மாநகர சபை உறுப்பினர் பாட்சா மொஹிதீன் அவர்கள் வபாத்தாகிவிட்டதாகவும் அவர்கள் சமூகத்திற்காக பணிசெய்த நல்ல சமூகசேவையாளர் என்றும் தெரிவித்து அவருக்கு மரியாதை செய்யும் முகமாக 2நிமிட துஆ பிரார்த்தனைக்கு சபை இடமளிக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார், அதற்கமைவாக முன்னை நாள் மாநகர சபை உறுப்பினர் பாட்சா மொஹிதீன் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டி 2நிமிட துஆப் பிரார்த்தனைக்கு நேரம் வழங்கப்பட்டது.
சென்ற கூட்ட அறிக்கை: அதனைத் தொடர்ந்து சென்ற கூட்ட அறிக்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டது, நேர விரயம் காரணமாக சென்ற கூட்ட அறிக்கையின் பிரதிகள் சபையோருக்கு வழங்கப்பட்டு அவை சபையோரால் வாசிக்கப்பட்டு பின்னர் திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ளும் நடைமுறை குறித்துப் பேசப்பட்டது. பின்னர் சென்ற கூட்ட அறிக்கை சபையின் ஆரம்பத்திலேயே படிக்கப்படுதல் சிறப்பானது அப்போதுதான் கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து சபைக்கு தெளிவு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதன்பிரகாரம் சென்ற கூட்ட அறிக்கை சபையில் செயலாளரால் படிக்கப்பட்டது.
சபையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் யாரால் முன்வைக்கப்பட்டது என்ற விபரங்கள் அறிக்கையில் இடம்பெறவேண்டும் என்ற கருத்தை சகோ.முபீன் வலியுறுத்தினார்,
எனினும் முன்னைய சம்மேளனக் கூட்டங்களில் அவ்வாறு கருத்துக்களைக்கூறிய அனைவரினதும் பெயர்கள் இடம்பெறுவது தனிநபர் விளம்பரத்துக்கு வழிசெய்யும் என்பதோடு குறைகுற்றங்கள் காணக்கூடிய நிலையும் தோன்றும் எனக் கூறப்பட்டதை செயலாளர் ஞாபகமூட்டினார்.
சகோதரர் அஸ்கர் அவர்கள் கருத்துக் கூறும்போது சம்மேளனத்தின் பொது உறவு சார்ந்த செயற்பாடுகள் பல  சம்மேளனப் பிரதிநிதிகளுக்கு தெரியாத நிலை தொடருவதாகவும், கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து தமக்கு அறியத்தரப்படவில்லை என்றும், தெரிவித்தார். அத்தோடு அமைச்சர் றிசாத பதியுத்தீன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடனான சந்திப்பு என்பன குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்தோடு சாவகச்சேரி பிரதேசம் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினார்.
திருத்தப்பட்ட அறிக்கையினை சகோ.முபீன் சரியெனப்பிரேரிக்க அதனை சகோதரர் எம்.ஜீ.பஸீர் வழிமொழிந்தார்.
சிறீலங்கா இஸ்லாமிய நிலையம், மற்றும் நீதியமைச்சின் பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பாகவும் சகோ.முபீன் சபையோருக்கு விளக்கமளித்தார், அதன்போது அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், வாக்குறுதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது, 200 வீடுகளை திருத்தியமைத்தல், 100 வீடுகளை புதிதாக அமைத்தல், உடனடியான நிவாரனங்கள், பிரதேச செயலாளரினால் தோற்றுவிக்கப்படும் தடைகள் குறித்தும் தாம் கவனம் செலுத்துதல் போன்றன அவற்றுள் முக்கியமானவையாகும்.
காணி உறுதி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் : அத்தோடு காணி உறுதி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன, குறிப்பாக சட்டத்தரணி மன்சூர் அவர்களினால் பதியப்பட்ட காணி உறுதிகள் இன்னும் காணிப்பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலை இருக்கின்றது எனவே காணி உறுதி தொடர்பான பிரச்சினைகளை கேட்டறியும் விண்ணப்பம் ஒன்றினை விநியோகித்து அதனடியாக காணிசார்ந்து நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து நீதியமைச்சின் மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பொறுத்தமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேற்படி கருத்தின் அடிப்படையில் செயற்படுதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி பள்ளிவாயல்கள : அடுத்து கிளிநொச்சி பள்ளிவாயல்கள் விடயமாகப் பேசப்பட்டது, அதிலும் குறிப்பாக கரடிப்போக்கு பள்ளிவாயல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது, அதனடிப்படையில் சகோதரர் முபீன், அல்-ஹாஜ் நியாஸ், சட்டத்தரனி றமீஸ் ஆகியோர் கொண்ட குழுவை சம்மேளனம் கரடிப்போக்கு பள்ளிவாயல் விடயமாக கவனம் எடுக்கும்படியும், தேவையேற்படின் தமது குழுவுடன் மேலும் இரு கிளிநொச்சி வாசிகளை இணைத்துக் கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த உபகுழு கரடிப்போக்கு பள்ளிவாயல் விடயத்தில் கவனம் செலுத்தி அடுத்த சம்மேளனக்கூட்டத்தில் அறிக்கையொன்றினை சமர்ப்பிக்கும். இன்ஸா அல்லாஹ்.
புனித றமழான் மாத நிகழ்வுகள்:
அடுத்து புனித றமழான் மாத நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நோன்புகால கஞ்சி வழங்குதல் தொடர்பாக பின்வரும் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.
•    பெரிய பள்ளிவாயல் – பள்ளிவாயலுக்கு நோன்புதிறக்க வருவோருக்கும் புதிய முஸ்லிம்களுக்குமாக கஞ்சி, இப்தார் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
•    சின்ன மொஹிதீன் பள்ளிவாயல் –பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    பெரிய மொஹிதீன் பள்ளிவாயல் - பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    செவல பள்ளிவாயல் ; பள்ளிவாயலுக்கு நோன்புதிறக்க வருவோருக்கு இப்தார் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
•    காமால் பள்ளிவாயல்: பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    முஹம்மதியா மஸ்ஜித் பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
•    மஸ்ஜித் அபூபக்கர்- புதிய சோனகர் தெரு- மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம் மட்டும்
•    பஸார் பள்ளிவாயல்: பள்ளிவாயலில் 50பேருக்கான இப்தார் ஏற்பாடுகளுடன் மஹல்லாவாசிகளுக்கான கஞ்சி விநியோகம்
அத்தோடு விசேட இப்தார் நிகழ்ச்சிகள் புதிய முஸ்லிம்களுக்காகவும், நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிமல்லாதோருக்குமாகவும் இணைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு வெளியில் யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒன்றுகூட்டுகின்றவகையில் இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது சிறப்பானது, அந்தவகையில்
•    புத்தளத்தில் ஏற்பாடுகளை சகோ.அஸ்கர் அவர்கள் மேற்கொள்வார் என்றும்
•    நீர்கொழும்பில் செடே அமைப்பு மேற்கொள்ளும் எனவும்
•    கொழும்பில் புரொபெசனல் போரம் அமைப்பு மேற்கொள்ளும்
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சாதரண இப்தார் ஒன்றிற்கு ரூபாய் 7000 வீதம் ஒவ்வொரு பள்ளிவாயலுக்கும் அவசியப்படுவதாக மதிப்பிடப்பட்டது.
அத்தோடு தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரணங்கள் வழ்ங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து பெருநாள் தொழுகை தொடர்பாக பேசப்பட்டது, பள்ளிவாயல் நிர்வாகங்களை அழைத்து இது குறித்து 31 ஜூலை ஞாயிற்றுக்கிழமை காலை பெரியபள்ளிவாயலில் கலந்துறையாடுதல் என முடிவு செய்யப்பட்டது.

நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்
•    சென்ற கூட்ட அறிக்கை சபையின் ஆரம்பத்தில் படிக்கப்பட்டு அங்கீகாரத்துக்காக விடப்படும்
•    காணி உறுதிகள் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்தல்
•    கரடிப்போக்கு பள்ளிவாயல் விவகாரத்துக்கான மூவர் அடங்கிய குழு (சகோதரர் முபீன், அல்-ஹாஜ் நியாஸ், சட்டத்தரனி றமீஸ் )நியமனம்
•    புனித றமழான் கால விநியோகங்களுக்காக குடியிருப்பாளர் தகவல்களை ஒன்று சேர்த்தல், மற்றும் விண்ணப்பங்களை அனுப்புதல் செயலாளரின் பொறுப்பில் விடப்பட்டது.
•    அமைச்சர் றிஸாத் பதியுத்தீன் அவர்களை ஆகஸ்ட் 23-28ஆம் திகதிகளுக்கிடையில் சந்தித்தல்.
•    பெருநாள் தொழுகைதொடர்பாக பள்ளிவாயல் நிருவாகங்களை அழைத்து 31ஆம் திகதி பெரியபள்ளிவாயலில் கலந்துறையாடுதல்
போன்ற தீர்மாங்கள் சபையில் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் யாழ் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்கும் அறிக்கை



2011 ஜூலை 03ம் நாள் இடம்பெற்ற பிரதிநிதிகள் சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் அங்கத்திவம் வகிக்கும் முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணையொன்றினை 2011 ஜூலை 28 அன்று யாழ் மாநகர சபைக்கூட்டத்தில் முன்வைத்தனர்,அதன்போது
·         மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கைகள் அமுலாக்கப்படவேண்டும்
·         பிரதேச செயலாளரின் நிலைகளில், அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும், அல்லது அவர் மாற்றப்படவேண்டும்
·         முஸ்லிம்களின் விவகாரங்களுக்கென முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்படவேண்டும்
ஆகிய முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து,
சட்டத்தரனி எம்.எம்.எம்.றமீஸ், சகோதரர் அஷ்கர் ரூமி, சகோதரர் முஹம்மது முஸ்தபா சகோதரர் அஜ்மைன் அஸ்பர் ஆகிய முஸ்லிம் மாந்கரசபை உறுப்பினர்கள் சபையினை பகிர்ஷ்கரிக்க முடிவுசெய்துள்ளனர், மேற்படி முடிவினையும் அவர்களது பிரேரணையினையும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் வரவேற்று முழுமையாக ஆதரிப்பதுடன், சமூக நலன கருதி குறித்த நான்கு முஸ்லிம் மாநகரச்பை உறுப்பினர்களும் மேற்கொண்டுள்ள அர்ப்பனத்துடன் கூடிய துணிகர தீர்மானத்திற்காக அவர்களை பாராட்டுகின்றது, அத்தோடு சமூகநீதி வேண்டித்தொடரப்பட்டுள்ள இம்முயற்சியானது அரசியல் நலன்களுக்கு அப்பால் நோக்கப்படவேண்டும், இனத்துவ நோக்குடனும், இனமுரண்பாட்டு எண்ணங்களுடனும் இதனை நாம் நோக்க வேண்டியதில்லை அத்துடன் இது ஒரு குறித்த தனிநபருக்கெதிரானதோ அல்லது ஒரு சில அரச  அதிகாரிகளுக்கெதிரானதோ அல்ல என்பதையும் இது அ ணுகுமுறைகளுக்கு எதிரானது என்பதையும் இந்த இடத்தில் நாம் ஞாபகமூட்டுகின்றோம், அத்தோடு குறித்த சமூகப்போராட்டம் சரியான இலக்குகளை அடைந்துகொள்ளும்வரை குறித்த மாநகரசபை உறுப்பினர்களின் முயற்சிக்கு சம்மேளனம் தனது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்பதையும் பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்
வஸ்ஸலாம்
இவ்வண்ணம்
அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (பொதுச்செயலாளர்-யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்)

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணை

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்த கவனயீர்ப்பு பிரேரணை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
கௌரவ மாநகர முதல்வர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வந்தனங்கள்,
வரலாற்றின் ஆரம்பகாலம்தொட்டு யாழ்ப்பாண மண்ணுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் மிகநெருக்கமான உறவு காணப்படுகின்றது, யாழ்ப்பாண மண்ணின் கலாசாரத்தோடும், தமிழ் மொழியுடனும், அரசியலோடும், பொருளாதாரத்தோடும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிக இறுக்கமான பிணைப்பும் உறவும் இருந்துவருகின்றது, ஒருதாய் மக்களாகவே இங்கு வாழ்கின்ற இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கணிக்கப்படுகின்றார்கள்.
வரலாற்றில் அவ்வப்போது எழுந்த இன த்துவ உணர்வுகளும், ஆதிக்க எண்ணங்களும் யாழ்ப்பாணத்தின் ஏனைய இனங்களை, சாதிய சமூகங்களைப் பாதித்ததைப்போலவே முஸ்லிம் சமூகத்தையும் பாதித்திருப்பதோடு இடப்பெயர்வுகளையும் உண்டுபண்ணியிருக்கின்றது, இருப்பினும் அவையெதுவும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக அடையாளப்படுத்தப்படவில்லை, அனால் 1990களில் எழுந்த ஆயுதப் பலத்துடன் கூடிய அதிகாரமும், இனத்துவ உணர்வின் அதி உச்ச நிலையும் யாழ்ப்பாண முஸ்லிம்களை என்றுமே மறக்க முடியாத ஒரு இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்பட்டார்கள்,
இரண்டு மணித்தியாலயத்தில் ஆயுத முனையில் பலவந்தமாக முஸ்லிம்கள் அவர்களது தாய் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அப்போது, அத்தகைய மிலேச்சனத்தை எதிர்த்த நல்ல தமிழ் உள்ளங்களையும் இந்த இடத்தில் நாம் மறந்துவிடவில்லை, கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் நல்லுறவைப்பேணியது மட்டுமல்ல, முக்கிய அரசியல் தலைமைகள் பல  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் மௌனம் காத்த வேளையில் புலிகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முஸ்லிம்களின் வெளியேற்றத்தை கடுமையாக எதிர்த்து கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்கள், இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கென தேவாபாத் என்னும் மீள்குடியேற்றக்கிராமத்தையும் அமைத்துக்கொடுத்தமை முஸ்லிம்களின் விவகாரத்தில் அவருக்கிருந்த தொப்புள்கொடி உறவை உணர்த்தப்போதுமானதாகும்.
அதுமாத்திரமல்ல தமிழர் விடுதலைக்கூட்டமைப்பும் முஸ்லிம்களை தமது சகோதரர்களாகவே மதித்தார்கள்,யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் அவர்களில் இருந்தே ஒருவரை பாராளுமன்றப் பிரதிநிதியாக்கிய பெருமை தமிழர் விடுதலைக்கூட்டமைப்புக்கு இருக்கின்றது.
அத்தகைய பல  நல்ல உள்ளங்களை நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்,
இவ்வாறான ஒரு வெளியேற்றம் எமது மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியது, இருபதுவருட அகதிவாழ்வு அவர்களின் வாழ்வில் பல்வேறு தாக்கங்களையும் மாறுதல்களையும் உண்டுபண்ணியது.தமது சுயம்தொலைத்து அங்கலாய்த்தவர்களாய், இருப்பற்றவர்களாய் நாம் அகதிகளாய் இருந்தோம், அப்போது எவ்வாறு திடீரென வெளியேற்றம் எம்மீது திணிக்கப்பட்டதோ அதேபோன்று மீள்குடியேற்றமும் நாம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென எம்ம்முன் வந்தது, 2009இல் முடிவுக்கு வந்த இனத்துவப்போராட்டத்தின் ஆயுதவடிவம் இந்த நாட்டிலே சமாதான சூழலை அமைதியை ஏற்படுத்த வழிசெய்தது.
எமது மக்களும் புத்துயிர்பெற்று, புதிய நம்பிக்கைகளை சுமந்தவர்களாக தமது தாய்மண்ணை பாசத்தோடு திரும்பிப்பார்த்தார்கள், மீள்குடியேற்றம் குறித்து சிந்தித்தார்கள், மிகுந்த கஷ்டத்தோடு பல்வேறு தியாகங்களுடன் அவர்கள் ஏற்படுத்திய தற்காலிக இருப்பிடங்கள், தற்காலிக எதிர்பார்ப்புக்களை ஒருபுறம் வைத்துவிட்டு தமது தாய்மண்ணில் தமது புதிய வாழ்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும், வரவேற்கும் தமிழ் உறவுகளை எதிர்பார்த்தும் தமது தாய் மண்ணை நோக்கி அவர்கள் மீண்டும் வந்தார்கள்.
கௌரவ முதல்வர் அவர்களும், எமது மதிப்பிற்குரிய அரச அதிபர் அவர்களும் எமது மக்களின் நிலையினை சீராக உணர்ந்து அதற்கேற்ற வகையிலே அரச இயந்திரத்தை ஒழுங்கமைத்து, எமது மக்களின் கண்ணீரையும் துயரத்தையும் துன்பத்தையும் உணர்ந்து அவர்களுக்கான மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கமைக்க முனவந்தார்கள், இதனை நாம் மிகுந்த நன்றியுணர்வோடு நோக்குகின்றோம், அவர்களுடன் எப்போதுமே நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். என்பதை இந்த சபையில் நாங்கள் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்,
எனினும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் இன்னும் தடைகள் இருப்பதாகவே நாம் உணருகின்றோம்,
அவர்களுக்கு இருப்பிடங்கள் இல்லையென்பதும், காணியற்றோர் அதிகமாக இருக்கின்றார்கள் என்பதும், தொழில்வாய்ப்புகள் இல்லையென்பதும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்பதும் அவர்களுக்கு இருக்கும் மிக முக்கிய சவால்கள் என நாம் அடையாளப்படுத்த முடியும் ஆனால் எமது மக்கள் இவற்றையெல்லாம் விட இன்னுமொரு முக்கிய சவால் இருப்பதாகவே உணருகின்றார்கள், அதனை அவர்கள் தினம் தினம் அனுபவிக்கின்றார்கள், அதனால் விரக்தியுருகின்றார்கள், ஒருவித அச்ச நிலைக்கும் சந்தேக நிலைக்கும் அவர்கள் உட்படுகின்றார்கள்.தமது தாய் மண்ணில் மீளவும் குடியேறும் வாய்ப்பு இல்லாமலாக்கப்படுமோ என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துகொண்டுள்ளது.
யாழ் முஸ்லிம் சமூகத்திற்கிருக்கின்ற மிக உச்ச அரசியல் பலத்தைக்கொண்டே இந்த சபைக்கு நாம் அனுப்பப்பட்டிருக்கின்றோம், அந்த மக்களின் பிரச்சினைகளை இந்த சபையிலேயே எம்மால் முன்வைக்க முடியும், இங்கிருந்துகொண்டே உயர் சபைகளுக்கு நாம் ஒரு அழுத்ததைக் கொடுக்க முயற்சிக்கின்றோம்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரின் ஒருசில நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் மீளவும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எமக்கு இருக்கின்றது, 'நீங்கள் இங்கே வரவேண்டாம்' என்ற வார்த்தைகள் எமது மக்களை நோக்கி நேரடியாக பல சந்தர்ப்பங்களில் பிரயோக்கிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது கடுமையான சட்ட அமுலாக்கங்களின் மூலமாக எமது மக்களை விரக்தியுறச்செய்து அதனடியாக அவர்கள் மீள்குடியேற்றத்தை வெறுக்கின்ற நிலையை அவர் ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என்பதை நாம் தெளிவாக உணருகின்றோம்.
எமக்கான நிவாரணங்களை இழுத்தடிப்புச்செய்து, உலக உணவுத்திட்ட உதவிகளை தாமதிக்கச்செய்து, யூ.என்.எச்.சீ.ஆர் அமைப்பின் மீளக்குடியேறியோர்க்கான உதவிகளை இல்லாமலாக்கி, வீட்டுத்திட்டங்களை இழுத்தடிப்புச்செய்து, எமது சொந்தக்காணிகளையே எமக்கு பகிர்ந்தளிக்கவோ பாவிக்கவோ இடங்கொடாது எமது நிறுவனங்களை இயங்காது தடுத்து, சாட்டுப்போக்குகள் கூறி, எமது மக்களின் மீள்குடியேற்றத்தை சூனியமாக்க எமது பிரதேச செயலாளர் எத்தனிக்கின்றார் என்பதுவே எமது மக்களின் பரவலான கணிப்பு,
எனவே குறித்த பிரதேச செயலாளரின் மீது நீதியின் பார்வை உடனடியாக திருப்பபடவேண்டும், அதுமட்டுமல்ல அவரது போக்கில் மாற்றம் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் அல்லது அவர் மாற்றப்படவேண்டும் என்பது எமது உடனடி எதிர்பார்ப்பாகும், அதனை இந்த நிறைவேற்ற இந்த சபைக்கு அதிகாரம் இல்லை என்பது எமக்குத்தெரியும் இருப்பினும் அரச கவனத்திற்கு இவ்விடயம் உடனடியாக கொண்டுவரப்படவேண்டும் என்பதோடு, இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும், அதற்கான மிக அடிமட்ட அழுத்தத்தை எமத்து சக்திக்கு உட்பட்டு இந்த சபையிலே ஏற்படுத்துவதே எமது இந்த பிரேரணையின் நோக்கமாகும்.
பிரதேச செயலாளரின் நிலைகளில், அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்
முஸ்லிம்களின் விவகாரங்களுக்கென முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்படவேண்டும்
மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கைகள் அமுலாக்கப்படவேண்டும்
என்ற மூன்று கோரிக்கைகளை இந்த சபையிலே முன்வைக்கின்றேம், அதற்கான அழுத்தத்தை அரசுக்கு இந்த சபை வழங்கவேண்டும் என்பதும், அதுவரை சபை நடவடிக்கைகளை முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களாகிய நாம் பகிர்ஷ்கரிக்கின்றோம், என்பதை இவ்விடத்தில் சபையில் தெரிவித்து சபை நடவடிக்கைகளிலிருந்த நாம் வெளியேறுகின்றோம். நன்றி.

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் 2011 ஜூலை ஊடக அறிக்கை

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 6வது பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சியில் 2011 ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி .எச்.எம்.லொட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. சகோ.ஜமால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடலில் பின்வரும் முக்கிய விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்மானங்களும் முடிவுகளும் பெறப்பட்டன.

•                    கிளிநொச்சி மக்களுடைய மீள்குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகள்

•                    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

•                    யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் வாக்களர் பதிவு

முதன்மையாக கிளிநொச்சி மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது,

காணியில்லாத பிரச்சினை

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி நகரம்,55அம் கட்டை, கரடிப்போக்கு, திருநகர், வட்டக்கச்சி, நாச்சிக்குடா,போன்ற பகுதிகளில் செறிவாக வாழ்ந்துவந்தனர், 1990ல் அனைவரும் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர், அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையினைத் தொடர்ந்து கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் காணிகள் திட்டமிட்ட அடிப்படையில் புலிகளின் அறிவுறித்தலின்படி சிறிய தொகைப்பணத்திற்கு பலவந்தமாக கொள்வனவு செய்யப்பட்டது, இப்போது அம்மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கையினை அமுல்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன, அவை  காணிகள் அனைத்தும் அரச  காணிகள் எனவே அவற்றை மீளப்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

அரச நிவாரணங்களில் காணப்படும் குறைபாடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 92 முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் இவர்களுள் 72 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஏனைய 20 குடும்பங்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அவை இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்

பள்ளிவாயல்களை அமைத்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பள்ளிவாயல்கள் இயங்கிவந்தன, அவற்றில் ஒன்று மட்டுமே இப்போது முழுமையான இயக்கத்தில் இருக்கின்றது ஏனைய பள்ளிவாயல்கள் உடனடியாக புனரமைக்கப்படவேண்டும், குறிப்பாக திருநகர் மற்றும் கரடிப்போக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் துரிதமாக புனரமைக்கப்படவேண்டும், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சம்மேளனம் திருநகர் பள்ளிவாயலை உடனடியாக புனரமைக்கின்ற அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு உறுதிமொழி வழங்கியது.

வடமாகாணத்தில் முஸ்லிம் வாக்களர் பதிவில் பாரிய நடைமுறைப் பிரச்சினைகள் நிலவுகின்றன, இது வடமாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும் இதனை வடமாகாண முஸ்லிம் சமூகம் உரிய கவனம் எடுத்து அதற்கு ஏற்ப முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.இதற்கு முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் உதவிகளும் ஒத்துழைப்புக்களும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது.

எனவே மேற்படி முக்கிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும்வகையில் முதன்மையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திந்து வடமாகண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரத்தை ஒரு தேசிய விடயமாக அணுகுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்தல் என்ற முடிவும் பெறப்பட்டது, இதனடிப்படையில் கடந்த மாதம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது, அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன்படி கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களை எதிர்வரும் ஜூலை 13ஆம் நாள் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படித் தீர்மானங்களுடன் சம்மேளனத்தின் ஜூலை மாத பிரதிநிதிகள் கூட்டம் நிறைவுபெற்றது.

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் 2011 ஜூலை பிரதிநிதிகள் கூட்டம் – கிளிநொச்சி


யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
2011 ஜூலை பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சி
03 ஜூலை 2011 ஏ.எச்.எம்.லொட்ஜ்- கண்டி வீதி கிளிநொச்சி

யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 6வது பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சியில் 2011 ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி .எச்.எம்.லொட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. 23 அங்கத்தவர்கள் கூட்டத்திற்கு சமூகம் தந்திருந்தனர், கூட்டத்தினை சகோ.ஜமால் தலைமை தாங்கினார், பின்வரும் விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உட்படுத்தப்பட்டிருந்தது.
·         கிளிநொச்சி மக்களுடைய மீள்குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகள்
·         முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
·         யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் வாக்களர் பதிவு
·         யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஒழுக்கக்கோவை மற்றும் பொருப்புக்களைப் பகிர்தல்
·         அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு
·         இதர  விடயங்கள்
முதன்மையாக கிளிநொச்சி மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது,
காணியில்லாத பிரச்சினை
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி நகரம், கரடிப்போக்கு, திருநகர், வட்டக்கச்சி, நாச்சிக்குடா,போன்ற பகுதிகளில் செறிவாக வாழ்ந்துவந்தனர், 1990ல் அனைவரும் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்,அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையினைத் தொடர்ந்து நாம் இங்கு வந்தபோது எமது காணிகளை புலிகள் சிறிய விலைகொடுத்து வாங்கினார்கள், இப்போது நாம் இங்கே வந்து மீளக்குடியேறுவதற்கு காணிகள் இல்லாத பிரச்சினைகள் இருக்கின்றது. எமது காணிகள் அனைத்தும் அரச  காணிகள் எனவே அவற்றை மீளப்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அரச நிவாரணங்களில் காணப்படும் குறைபாடுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 92 குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் இவர்களுள் 72 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஏனைய 20 குடும்பங்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அவை இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்
பள்ளிவாயல்களை அமைத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பள்ளிவாயல்கள் இயங்கிவந்தன, அவற்றில் ஒன்று மட்டுமே இப்போது முழுமையான இயக்கத்தில் இருக்கின்றது ஏனைய பள்ளிவாயல்கள் உடனடியாக புனரமைக்கப்படவேண்டும், குறிப்பாக திருநகர் மற்றும் கரடிப்போக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் துரிதமாக புனரமைக்கப்படவேண்டும், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சம்மேளனம் திருநகர் பள்ளிவாயலை உடனடியாக புனரமைக்கின்ற அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு உறுதிமொழி வழங்கியது.
முறிகண்டிப்பகுதியில் 30 ஏக்கர் காணியை முஸ்லிம்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான உடன்பாடு கிளிநொச்சி அரச அதிபருடன் எட்டப்பட்டுள்ளது இதனை சீரான அமைப்பில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதிகளை சம்மேளனத்துடன் இணைத்துக்கொள்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது.
அடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு தொடர்பாக சம்மேளன அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.அதில்: சம்மேளனம் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. சம்மேளனம் பின்வரும் 7 முக்கிய விடயங்களை கருத்தில்கொண்டு மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தை முன்னெடுகின்றது
1.  மீள்குடியேற்றம் குறித்த விழிப்புணர்வையேற்படுத்துதல்
2.  மீள்குடியேற்றத்திற்கான அரசபதிவுகள் மற்றும் வாக்காளர் பதிவு
3.  வீடுகளைத்திருத்தியமைத்தல், வீட்டுத்திட்டம்
4.  காணியற்றோருக்கான காணிகளைப்பகிர்ந்தளித்தல் மற்றும் புதிய வீட்டுத்திட்டம்
5.  தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளையேற்படுத்துதல்
6.  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
7.  கல்வி கலாசார விடயங்களில் கவனம் செலுத்துதல்
போன்றவையே எமது திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இத்தகைய திட்டங்களை நாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்தோம், அவர்கள் இதனை மிகவும் சாதகமாக அணுகினார்கள் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் உத்தரவாதங்கள் தரப்பட்டன.இதனடிப்படையில் மீள்குடியேற்றத்திற்கான அரசபதிவுகள் மற்றும் வாக்காளர் பதிவு சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சபையோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நாம் எல்லோரும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் எமது வாக்காளர் பதிவே மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான அடையாளமாகும்.எனவே வாக்காளர் பதிவு குறித்து எமது சமூகத்திடம் விளக்கமளிக்கவேண்டிய தேவையிருக்கின்றது. எம்மிடம் ஆகக்குறைந்தது 5000 வாக்குகளாகவது இருக்குமாக இருந்தால் அது எமது பலமாகும், இது தேர்தல் அல்லது அரசியல் நடவடிக்கை என எவரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது, இதனை எமது சமுதாயத்தின் அடையாளமாகவே நாம் கணிக்கின்றோம், தேர்தல் காலங்களில் நீங்கள் எவரும் வாக்களிக்கலாம் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை நாம் உணரவேண்டும். எனவே இவ்விடயமாக சபையில் பல்வேறு கருத்துகள் நிலவின
வாக்காளர் பதிவிற்காக நாம் மக்களை அழைத்தால் அவர்கள் அதற்கு செவிசாய்க்க மாட்டார்கள், மக்கள் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள் இன்னும் நாம் எதையும் மக்களுக்கு செய்யவில்லை, வாக்காளர் பதிவு பல நடைமுறைப்பிரச்சினைகளை உருவாக்கும், என ஒரு சாரார் கருத்துக்கூற
அடுத்த சாரார்: மக்களை நாம் சீரழித்துவிட்டோம், அவர்களை நல்ல சிந்தனையுள்ளவர்களாக நாம் நெறிப்படுத்தவில்லை வாக்களிப்பு உரிமை என்பது ஒரு உயர்வான அடிப்படை உரிமையாகும் இதனை நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டும், யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கான வாக்காளர் பதிவு இருக்கின்றபோதுதான் அதற்கு ஒரு பெறுமதியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருக்கும் வாக்களர்பதிவுகளால் எமது மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை,வெறுமனே குழந்தைகளை பாடசாலைக்குச் சேர்ப்ப்தற்கு மட்டும்தான் அந்த உரிமை பயன்படுத்தப்படும், வேறு எந்த நன்மையும் ஏற்படாது.எனவே மக்களை நாம் விழிப்படையச் செய்யவேண்டும்.
இதனடிப்படையில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகள் எந்த நிலைப்பாட்டினைக்கொண்டுள்ளன எனக்கேட்கப்பட்டது. அதற்கு பொதுவாக அரசியல் கட்சிகள் வாக்காளர் பதிவு குறித்துப் பேசினால் அது மக்களால் நிராகரிக்கப்படும் என்பதுடன் மக்களிடம் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என்று கூறப்பட்டதுடன் அவர்கள் பொதுவாக ஊடக அறிக்கையொன்றினை வெளியிடுவதாக உடன்பாடு தெரிவித்தனர்.
காணிப்பிரச்சினை:
பறச்சேறிவெளி, தூக்குமரக்காடு, மற்றும் பொம்மைவெளிப்பகுதிகளில் காணப்படும் தனியார் காணிகளைக் கொள்வனவுசெய்து சகாயவிலையில் மக்களிடையே பகிர்ந்தளித்தல் என்ற அபிப்பராயம் தெரிவிக்கப்பட்டது, இது சபையின் அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.
கிளிநொச்சி முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக முறிகண்டியில் உள்ள காணி தொடர்பான தகவல்களைப்பெற்று அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்தல்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு:
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு விடயத்தில் அமைச்சர் கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களை எதிர்வரும் 13ஆம் நாள் சந்தித்தல், மற்றும் ஏனைய அமைச்சர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தல்.
பிரதேச செயலாளர் விடயமாக:
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் செயலாளர் கடுமையான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகின்றார், எனவே அவரது முட்டுக்கட்டைகளை உடனடியாக இல்லாமலாக்க வேண்டும் இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.அதன் ஒரு கட்டமாக எமது மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபையில் பிரதேச செயலாளருக்கு எதிரான ஒரு பிரேரனையினை முன்வைப்பார்கள் என முடிவு செய்யப்பட்டதுடன், வேறு மட்டங்களிலும் இது குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்தல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
வாக்காளர் பதிவு தொடர்பாக:
வாக்காளர்பதிவு தொடர்பாக முதற்கட்டமாக ஏற்கனவே பதிவு செய்த வாக்காளர்கள் யாழ் மாவட்ட வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அவதானித்து, அவ்வாறு பதிவிலிடப்படாவிட்டால் அதனை சட்டரீதியாக அணுகுதல் சிறப்பானது என்ற கருத்தை சகோ, முபீன் சபையில் முன்வைத்தார், இதன் சாதக பாதகங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டது, அதனைத்தொடர்ந்து மேற்படி விடயத்தை
சிறிலங்கன் வே, புத்தளம வாழ் யாழ்,கிளிநொச்சி மக்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து புத்தளம் பகுதியிலும், சமத்துவத்திற்கான யாழ் சிவில் சமூகம் யாழ்ப்பாணத்திலும் மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது, அத்துடன் இதற்கான இலவச சட்ட ஆலோசனைகளை சகோதரர் முபீன் பெற்றுத்தருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பின்வருவோர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சபைக்கான அங்கத்தவர்களாக உள்வாங்கப்பட்டனர்
1.  சகோதரர். சாஜஹான்
2.  சகோதரர் யூ.எல்.ஏ. வாஹித்
3.  சகோதரர் எம்.ஏ.எம்.சுபைர்
4.  சகோதரர் எம்.எஸ்.எம்.நாஸர்
5.  சகோதரர் ஏ.எச்.எம்.அய்யூப்
6.  சகோதரர் எம்.உவைஸ்
தொடர்ந்தும் சம்மேளன கூட்டங்களுக்கு வருகைதராத அங்கத்தவர்கள் குறித்து;
தொடர்ந்தும் சம்மேளன கூட்டங்களுக்கு வருகைதராத அங்கத்தவர்கள் குறித்து அவர்களுக்கு பொதுவான அறிவித்தல் ஒன்றினை முதற்கட்டமாக வழங்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் ஒழுக்கக்கோவை:
சம்மேளனத்திற்கான ஒழுங்க்ககோவை சபை அங்கத்தவ்ர்களிடையே ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் அதன்மீதான கலந்துரையாடலும் வாக்கெடுப்பும் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் கூட்டங்களில் இடம்பெறும் எனத்தீர்மானிக்கப்பட்டது.
கடந்த கூட்ட அறிக்கை:
ஜூன் மாத சம்மேளனத்தின் கூட்ட அறிக்கையின் பிரதிகள் சபையோரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து ஏதேனும் திருத்தங்கல் இருப்பின் முன்வைக்கும்படி கூறப்பட்டது.
சமத்துவத்துக்கான யாழ் சிவிம் சமூகத்தின் சார்பாக சகோ.சர்மிளா அவர்கள் தமது நிறுவனத்துக்கும் சம்மேளனத்தின் செயலாளருக்கும் இடையில் நிகழ்ந்த கொடுக்கல்வாங்கள் தொடர்பான விடயம் சம்மேளனத்தின் அறிக்கையில் இடம்பெறத்தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தார், இருப்பினும் அது எதற்காக அங்கே இடம்பெற்றது என்பதை சட்டத்தரணை றமீஸ் அவர்கள் விவரித்தார். அதன்பின் ஏனைய திருத்தங்கள் எதுவும் இன்றி சம்மேளனத்தின் ஜூன் மாத கூட்ட அறிக்கை சபையோரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அதனை சகோதரர் எம் ஜீ பஸீர் பிரேரிக்க சகோதர அமீன் அவர்கள் ஆமோதித்தார்கள்
நியமனங்கள்:
சம்மேளனத்தின் நிதிப்பொருப்பாளராக சகோதரர் எம்.யூ.எம்.தாஹிர் அவர்களை சகோதரர் அமீன் பிரேரிக்க சகோதர் தையுப் ஆமோதித்தார், சபையோரின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் சகோதரர் எம்.யூ.எம்.தாஹிர் அவர்கள் சம்மேளனத்தின் நிதிப்பொருப்பாளராக நியமிக்கப்பட்டார்
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர்தெரிவு
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோதரர் ஜாமால் மொஹிடீன் அவர்களை சகோதரர் எம்,ஜீ.பஸீர் அவர்கள் பிரேரிக்க சகோதரர் சட்டத்தரனி ரமீஸ் அவர்கள் வழிமொழிந்தார்கள், இது சபையோரால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
நிதிசார் விடயங்கள்
சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்புகள் மாதாந்தம் 1000ரூபாவை சந்தாவாக வழங்கும் அதேவேளை, தனிப்பட்ட அங்கத்தினர்கள் தலா 200ரூபாவை மாதாந்தம் சம்மேளனத்திற்கான சந்தாவாக வழங்குவார்கள்.
சம்மேளனத்திற்கான மாதாந்த உணவு மற்றும் காகிதாகிகள் செல்விற்கென 8750ரூபாவை சமத்துவத்திற்கான யாழ் சிவில் சமூக அமைப்பு வழங்குவதாக அதன் தலைவர் சகோதரர் சுனீஸ் சபையில் அறிவித்தார். இதனை சபையோர் வரவேற்றனர்.
சம்மேளனத்தின் மாதாந்த கூட்ட அறிக்கை அங்கத்த்வர்களுக்கு கிடைக்கச்செய்வதற்காக தாபால் செலவினமாக மாதந்தம் 300 ரூபாவை வழங்குவதாக சகோதரர் முபீன் அறிவித்தார். இதனையும் சபை வரவேற்றுக்கொண்டது.
மேற்படி முக்கிய தீர்மானங்களுடன், கிளிநொச்சியில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, கூட்டம் துஆவுடன் நிறைவு பெற்றது.