ஹிஜ்ரி 1432- 31 ஆகஸ்ட் 2011 புதன் கிழமை
1990 பலவந்த வெளியேற்றம், 20 வருட அகதி வாழ்வு ஆகியன கழிந்த நிலையில் மீளக்குடியேறும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது ஈதுல் பெருநாள் தொழுகையினையும் ஒன்றுகூடலையும் வெகு சிறப்பாக யாழ், ஒஸ்மானியா வளாகத்தில் கூட்டாக நிறைவேற்றினர், அல்ஹம்துலில்லாஹ்,
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வழிகாட்டலுடன் யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் அனைத்து பள்ளிவாயலகளினதும் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது காலை 7.00 மணிக்கு தக்பீருடன் ஆரம்பிக்கப்பட்டது, மௌளவி ஜிப்ரி, மௌலவி அப்துல் அஸீஸ் ஆகியோருடைய தலைமையின் கீழ் தக்பீர் நிகழ்வுகள் நடைபெற்றன, காலை 7.45 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையினை மௌலவி அப்துல் அஸீஸ் அவர்கள் முன்னின்று நடாத்தினார்கள். ஈதுல் பித்ர் குத்பா பேருரையினை மௌலவி மஹ்மூத் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தினார்கள். ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் பிரிவினையின் பாதகத்தன்மையினையும் கருவாகக் கொண்டு குத்பா உரை நிகழ்த்தப்பட்டது.யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தில் நல்ல முன்மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது, இதனை பாதுகாக்க வேண்டும் இதனை சிதைக்க செய்தானியத்துகள் முயல முடியும், ஆனால் எவருமே அத்தகைய செய்தானியத்துக்கு இடமளிக்காமல் இத்தகைய நல்ல முன்மாதிரிகளை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி முன்னெடுக்க வேண்டும். இத்தகைய நல்ல முன்மாதிரிகளுக்கு எவரெல்லாம் முன்னின்று உழைத்தார்களோ அவர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள், அல்லாஹ் அவர்களுடைய மீஸானுல் ஹஸ்னாத்தை பாராமானதாக ஆக்கியருளுவானாகவும். என தனதுரையினை நிறைவு செய்தார்கள். எதிர்வரும் காலங்களில் ஆண்,பெண் என ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் நடைமுறை மேலும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று ஒரு சிலரால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அல்லாஹ்வின் அருள் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்ற ஈதுல் பித்ர் நிகழ்வுகளின் இறுதியில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களும் பறிமாறப்பட்டன,
கலந்துகொண்ட அனைவரும் முஆனகா முஸாபஹா செய்த நிலையில் மிகவும் மனமகிழ்ச்சியுடன் திடலில் இருந்து கலைந்து சென்றனர்.
தகவல்
அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி)
பொதுச்செயலாளர்
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
No comments:
Post a Comment