யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் 6வது பிரதிநிதிகள் கூட்டம் கிளிநொச்சியில் 2011 ஜூலை 03 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி .எச்.எம்.லொட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. சகோ.ஜமால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடலில் பின்வரும் முக்கிய விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்மானங்களும் முடிவுகளும் பெறப்பட்டன.
• கிளிநொச்சி மக்களுடைய மீள்குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகள்
• முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
• யாழ்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் வாக்களர் பதிவு
முதன்மையாக கிளிநொச்சி மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது,
காணியில்லாத பிரச்சினை
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி நகரம்,55அம் கட்டை, கரடிப்போக்கு, திருநகர், வட்டக்கச்சி, நாச்சிக்குடா,போன்ற பகுதிகளில் செறிவாக வாழ்ந்துவந்தனர், 1990ல் அனைவரும் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர், அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையினைத் தொடர்ந்து கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் காணிகள் திட்டமிட்ட அடிப்படையில் புலிகளின் அறிவுறித்தலின்படி சிறிய தொகைப்பணத்திற்கு பலவந்தமாக கொள்வனவு செய்யப்பட்டது, இப்போது அம்மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கையினை அமுல்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன, அவை காணிகள் அனைத்தும் அரச காணிகள் எனவே அவற்றை மீளப்பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அரச நிவாரணங்களில் காணப்படும் குறைபாடுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 92 முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் இவர்களுள் 72 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஏனைய 20 குடும்பங்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அவை இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்
பள்ளிவாயல்களை அமைத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பள்ளிவாயல்கள் இயங்கிவந்தன, அவற்றில் ஒன்று மட்டுமே இப்போது முழுமையான இயக்கத்தில் இருக்கின்றது ஏனைய பள்ளிவாயல்கள் உடனடியாக புனரமைக்கப்படவேண்டும், குறிப்பாக திருநகர் மற்றும் கரடிப்போக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் துரிதமாக புனரமைக்கப்படவேண்டும், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சம்மேளனம் திருநகர் பள்ளிவாயலை உடனடியாக புனரமைக்கின்ற அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு உறுதிமொழி வழங்கியது.
வடமாகாணத்தில் முஸ்லிம் வாக்களர் பதிவில் பாரிய நடைமுறைப் பிரச்சினைகள் நிலவுகின்றன, இது வடமாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவாலாகும் இதனை வடமாகாண முஸ்லிம் சமூகம் உரிய கவனம் எடுத்து அதற்கு ஏற்ப முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.இதற்கு முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் உதவிகளும் ஒத்துழைப்புக்களும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது.
எனவே மேற்படி முக்கிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும்வகையில் முதன்மையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திந்து வடமாகண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரத்தை ஒரு தேசிய விடயமாக அணுகுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்தல் என்ற முடிவும் பெறப்பட்டது, இதனடிப்படையில் கடந்த மாதம் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது, அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன்படி கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களை எதிர்வரும் ஜூலை 13ஆம் நாள் சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படித் தீர்மானங்களுடன் சம்மேளனத்தின் ஜூலை மாத பிரதிநிதிகள் கூட்டம் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment