காலம்: 05 மார்ச் 2011 (காலை 10.30 முதல் பகல் 3.30 வரை)
இடம்: ஒஸ்மானியா வளாகம்
கலந்துகொண்டோர்: 30 சம்மேளனப்பிரதிநிதிகள்
ஆன்மீக உரை: ஆன்மீக உரையின்போது “அறியாமையின் ஆபத்து” என்னும் தலைப்பில் கருத்துகள் பேசப்பட்டன, சமூகத்தலைவர்களாகிய நாம் அறிவுசார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கருத்து பேசப்பட்டது.
தலைமை உரை:இது என்னுடைய இறுதி தலைமையுரையாக அமையமுடியும், சம்மேளனம் மக்களினதும் அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் நம்பிக்கையை வென்றுள்ளது, இது காத்திரமான பல பணிகளை மேற்கொள்கின்றது எதிர்காலங்களில் இன்னும் பல பணிகளை மேற்கொள்ளும், நான் ஒரு சாதாரண அங்கத்தினாக இருந்து செயலாற்றவே விரும்புகின்றேன். அனைவரினதும் ஒற்றுமையே முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார்.
சென்ற கூட்ட அறிக்கை பெப்ரவரி செயற்பாட்டறிக்கை: சென்ற கூட்ட அறிக்கை சபையில் வாசிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்கீகரிக்கப்பட்டன.
மீள் குடியேற்றம் எதிர்கொள்ளும் சவால்கள்
பதிவு சார்ந்த நடைமுறைப் பிரச்சினைகள்: யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரச பதிவுகள் சார்ந்து ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன, அரச அ திகாரிகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியேறினால் மட்டுமே அவர்களுக்கான நிவாரணங்கள் நஷ்ட ஈடுகள் என்பன வழங்கப்படும் என்று கூறுகின்றார்கள், இது அவர்களது பார்வையில் சரியாகினும், முஸ்லிம்களுடைய விடயத்தில் பல நடைமுறைப் பிரச்சினைகள் இருக்கின்றன. பதிவுகளை மேற்கொள்வதே முதல் தரத்தில் அவசியமானதாகும்,
· யாழ்ப்பாண முஸ்லிம்கள் அனைவரும் பதிவுகளை மேற்கொள்ளவது அவசியம்
· யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுக்கே நிவாரணங்கள், நஷ்டஈடு போன்றவற்றில் முதலிடம் வழங்கப்படவேண்டும்.
· வீட்டுத்திட்டங்கள், காணிப்பிரச்சினைகள் போன்ற விடயத்தில் யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள அனைவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்
என்ற கருத்தின் அடிப்படையில் சம்மேளன தனது வேலைத்திட்டங்கள், அழுத்தங்களை வழங்கும் அத்தோடு
யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொண்டு, வெளிமாவட்டங்களில் வசிக்கின்ற மக்கள் தமது அரச கரும செயற்பாடுகளை அவர்களின் பகுதிகளிலேயே மேற்கொள்ளத்தக்க வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலதிக பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையேற்படும் பட்சத்தில் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் அது குறித்த பொது அறிவித்தல்களை எல்லாப்பிரதேசங்களுக்கும் வழங்கும், மக்கள் வதந்திகளை நம்பி ஏமாறத்தேவையில்லை
காணிப்பிரச்சினை: யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற செயற்திட்டத்தில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக காணியற்றோர் பிரச்சினை இருக்கின்றது, சுமார் 4,500 குடும்பங்கள் காணியற்ற நிலையில் இருக்கின்றார்கள், இவர்களுக்கான காணிப் பிரச்சினை தீர்க்கப்படும்போது வீடில்லாப் பிரச்சினை ஓரளவிற்கு தீர்க்கப் படமுடியும், எமது மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் முஸ்லிம் வட்டாரத்தை அண்டியதாகவே வசிக்க விரும்புவார்கள்,தூர இடங்களிற்கு செல்வதற்கு அவர்கள் விருப்பத்துடன் இருக்கமாட்டார்கள், அல்லைப்பிட்டி அல்லது கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு அவர்களை குடியேற்றுவது பொறுத்தமான நடைமுறையாக அமையாது, இதற்குப் பல காரணிகள் இருக்கின்றன
· முஸ்லிம்களின் விருப்பு முஸ்லிம் வட்டாரத்தை அண்டியதாக அல்லது அதற்கு மிகக்கிட்டிய சூழலில் இருத்தல் என்பதாகும்
· யாழ்ப்பாண முஸ்லிம்கள் மாநகர அரசியல் பலத்தைக் கொண்டவர்கள், அவர்களிடம் மாகாண அல்லது மாவட்ட அரசியல் பலம் பெரிதாக இல்லை எனவே
· நிலத்தொடர்புள்ள முஸ்லிம் பிரதேசம் அமைவது நிர்வாக ரீதியாகவும், சமூக அமைப்பு ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பானதாக அமையும்.
மேற்படி காரணிகளினடிப்படையில் பின்வரும் தெரிவுகளை நோக்கி முஸ்லிம்கள் செல்ல முடியும்
1. பொம்மைவெளி, தூக்குமேடைக்காடு, பரச்சேரிவெளி,காக்கையந்தீவு வரை உள்ள தனியார் காணிகளைக்கொள்வனவு செய்து அதில் குடியேற்றங்களை ஏற்படுத்துதல்
2. தொடர்மாடி வீட்டுத்திட்டங்களை அமுலாக்குதல்
இவைதவிர யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள முன்னைய முஸ்லிம் குடியேற்றங்களை அண்டியதாக புதிய குடியேற்றங்களை ஏற்படுத்துதல்
சாவகச்சேரி, கொடிகாமம், உஸன்,இயக்கச்சி போன்ற பகுதிகளை அண்டியதாக குடியேற்றங்களை அமைத்தல்
காணி தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுவதற்கென பின்வருவோரைக்கொண்ட காணி உப குழு அமைக்கப்பட்டது.
1. சுவர்க ஹான் சுனீஸ்
2. றொஷான்
3. ஷிபான்
4. நிலாம்
5. ஸைபுத்தீன்
காணி சார்ந்த செயற்குழு மேற்சொன்ன பகுதிகளில் உள்ள வெற்றுக்காணிகளின் விபரங்களைத் திரட்டி, அவற்றின் உரிமையாளர்களை அணுகி சகாய விலைக்கு அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.
வீடில்லாப்பிரச்சினை:
வீடில்லாப்பிரச்சினை குறித்து அடுத்துவரும் கூட்டங்களில் கலந்துரையாடுதல் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு
அடுத்து இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு குறித்துப்பேசப்பட்டது
சபையில் 30 அங்கத்தினர்களே சமூகமளித்திருந்ததால் கோரம் சபையில் இருக்கவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இருப்பினும் சமூக உணர்வுடன் இங்கே சமூகம் தந்திருக்கும் 30 அங்கத்தவர்களை விட சமூகம் தராத 33 அங்கத்தவர்கள் குறித்து நாம் கவனம் செலுத்தினால் அது இங்கே சமூகம் தந்திருக்கும் 30 அங்கத்தினரையும் அவமதிப்பதாகவே அமையும் என அதற்கு மாற்றுக் கருத்தும் கூறப்பட்டது.
தலைவரை அடிக்கடி மாற்றுவதன் மூலம் நாம் சந்திக்கும் வெளியாரிடம் மாற்று அபிப்பராயங்கள் எழ வாய்ப்பிருக்கின்றது, ஒரே தலைவர் குறித்த ஒரு காலத்திற்கு இருப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்து சபையில் முன்வைக்கப்பட்டது.
சம்மேளனம் குறித்த சரியான விளக்கமின்மையே மேற்படி கருத்துக்கள் எழக்காரணம், சம்மேளனம் ஒரு தனியான அமைப்பு அல்ல, அது பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பு, மேற்சொன்ன நியாயங்கள் ஒரு அமைப்பிற்குப் பொருந்தும் ஆனால் கூட்டமைப்பிற்குப் பொருந்தாது, உலக வழக்கில் கூட்டமைப்புகளில் தலைவர்கள் சுழ்ற்சி முறையில் தெரிவாகுவது நடைமுறையில் காணப்படும் விடயமாகும், சம்மேளனத்தின் உயிர் நாடி சமூகத்தின் ஒற்றுமையாகும், சுழற்சி முறையிலான தலைமைத்துவம் அந்த ஒற்றுமையினை மேலும் வலிமையானதாக மாற்றியமைக்கும் எனவே இரு மாதங்களுக்கொருமுறை தலைவர் தெரிவு என்ற விடயத்தில் நாம் கண்டிப்பாக இருப்போம். என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
சம்மேளனத்தின் அடிப்படைவிதிகளுள் ஒன்றாக இருப்பது “ சம்மேளனத்தின் தலைவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சிமுறையில் தெரிவு செய்யப்படுவதுதான்” இருப்பினும் குறித்த இரண்டு மாதங்களுக்கு கடமையாற்றிய தலைவர் சிறப்பாக கடமையாற்றினார், அவரின் சேவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவைப்படும் என சபையின் பெரும்பான்மை அங்கத்தினர்கள் கருதும்போது அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குமென தற்போது நடைமுறையில் இருக்கும் தலைவரை மீண்டும் தெரிவு செய்ய முடியும் என்ற கருத்தும் கூறப்பட்டது.
இறுதியாக அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கான (மார்ச், ஏப்ரல் 2011) தலைவர் தெரிவு இடம்பெற்றது.
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோதரர் தாஹிர் அவர்களை சகோ, முஜாஹித் பிரேரித்தார், அதனை சகோ.ஜஸ்ரின் ஆமோதித்தார். வேறு எவரது பெயர்களும் தலைவர் தெரிவுக்காக பிரேரிக்கப்படவில்லை, எனவே சபையோரின் ஏகோபித்த உடன்பாட்டுடன் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக சகோ. எம்.யூ.எம். தாஹிர் அவர்கள் செயலாற்றுவார்கள்.
அடுத்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை இடம்பெறும் இதனை சம்மேளனத்தின் அனைத்து அங்கத்தினர்களும் தமக்கான அறிவித்தலாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
இவ்வண்ணம்
அஸ்-ஷெய்க்.அய்யூப் அஸ்மின்
பொதுச் செயலாளர்
(யா/கிளி, முஸ்லிம் சம்மேளனம்)
No comments:
Post a Comment