Sunday, April 10, 2011

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக அஷ்-ஷெய்க் அ.ய்யூப் அஸ்மின் (நளீமி) வழங்கிய சாட்சியம்


இடம்: குரு நகர் கலாச்சார மண்டபம்- யாழ்ப்பாணம்
காலம்:12 நவம்பர் 2010 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 8.00 மணி
அனைவருக்கும் வந்தனங்கள்!
கடந்த 30 வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தம், இனத்துவமோதல்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு சார்பில் எமது சாட்சியங்களைப்பதிய நீங்கள் எடுக்கும் முயற்சியை பாராட்டி எனது சாட்சியத்தை தொடங்கலாம் என  நினைக்கின்றேன்.இன்ஸா அல்லாஹ்.
அப்போது எனக்கு வயது 12 - 1990 ஒக்டோபர் 30ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, அதிகாலை 6 மணியளவில் இருக்கும், ஆண்கள் அனைவரையும் உடனடியாக ஜின்னா மைதானத்திற்கு வருமாறு புலிகளிடமிருந்து அழைப்பு வந்தது, அழைப்பினை அப்போதைய புலிகளின் யாழ் மாவட்ட பொருப்பாளர் ஆஞ்சநேயர் என்பவரே விடுத்திருந்தார். (2002இன் பின்னர் இளம்பரிதி என்னும் பெயரில் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொருப்பதிகாரியாக செயற்பட்டவரும் அதே ஆஞ்சநேயர் என்பவர்தான்) எனது தந்தை உட்பட பலரும் குறித்த மைதானத்துக்கு சென்றுவிட்டிருந்தனர், அன்று வழமைக்கு மாற்றமாக பெண்புலிகளும் ஆண் புலிகளும் ஊருக்குள் அதிகமாக நடமாடினர், பெண்களையும் குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேறி ஐந்து சந்திக்கு போகுமாறு வீடுவீடாக அவர்கள் கூறிக்கொண்டு சென்றனர். நானும் எனது தாயும் எனது தங்கையும், இரு சிறிய தம்பிமாரும் அவர்கள் கூறியதுபோல வீட்டைவிட்டு வெளியேறிச்சென்றோம், எமது வீட்டின் திறப்பை ஒரு பெண் புலி உருப்பினர் வாங்கி ஒரு தாளில் எமது வீட்டு விலாசத்தை எழுதி அத்தாளைக்கொண்டு திறப்பை சுற்றி ஒட்டி, ஒரு சிறிய பெட்டியில் வைத்தார். நாம் அனைவரும் ஐந்து சந்திக்குச்சென்றோம், அங்கே எமது தந்தை எம்மைத் தேடிக்கொண்டிருந்தார், அவரிடம் சென்று என்ன விடயம் என்று கேட்டோம்; அப்போது அவர் எல்லோரையும் வவுனியாவுக்கு அங்காலே செல்லும்படி மேலிடத்திலிருந்து ஓடர் வந்திருப்பதாக சொன்னார்கள்; உடனடியாக நாம் செல்லவேண்டியுள்ளது என்றார், எமக்கும் வியப்பாக இருந்தது ஆனால் பயணம் போகப்போகின்றோம் என்ற மகிழ்ச்சி எமக்குள் இருந்தது. இரு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் சோதிக்கப்பட்டார்கள், எல்லா உடமைகளும் பறிக்கப்பட்டன சிறுதொகைப்பணமும் உடைகளும் தரப்பட்டது, எவ்வித ஆவணங்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. என்னுடைய தந்தையின் குடும்பத்தார் அனைவருடனும் இணைந்து நாம் ஒன்றாகவே எமது பயணத்தை மேற்கொண்டோம், யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரிவரை புலிகளின் டிரக்டர் வண்டியிலும் அங்கிருந்து நாச்சுக்குடா வழியாக மடுவரை கால்நடையாகவும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரை லொறியிலும் நாம் பயணித்தோம், இடையில் எனது ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் நோய் காரணமாக இறந்தும் விட்டார் அவரது உடலையும் சுமந்தே நாம் நடந்து சென்றோம், எல்லோரும் அழுத வண்ணமே நடந்தோம். கவலை எம்மை சூழ்ந்திருந்தது. கர்ப்பினிப்பெண்களும் வயோதிபர்களும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்துடனேயே அப்பயணத்தை மேற்கொண்டார்கள். அந்தப்பயணம் எமது வாழ்வில் ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்திவிடும் என்பது அப்போது எமக்குத்தெரியாது. நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி பின் வருடங்களாகி இப்போது இரு தசாப்த்தங்களையும் கடந்து சென்றுவிட்டது.பலவந்தமாக இடம்பெயர்க்கப்பட்டவர்களாக இன்றும் எமது சொந்த நாட்டில் எமது தாயகத்திற்கு மீள முழுகையாக முடியாத நிலையில் சிறகுகள் உடைக்கப்பட்ட பறவைகளாக எனது சமுதாயம் இருக்கின்றது.  அது குறித்தே எனது பதிவுகளை சுருக்கமாக இங்கே சொல்ல நாடுகின்றேன்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய இனப்பிரச்சினையில் வடமாகாண, முஸ்லிம்களின் வெளியேற்றம் பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்று தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். எனெனில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற ஆயுத யுத்தத்தினால் எற்பட்ட பாதிப்பாக இது அமையவில்லை.இது யுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் போரியல் உபாயமுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
உயிரைப்பறிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் எப்படி சுதந்திரமான மனிதனின் இய க்கத்தைப் பாதிக்குமோ அப்படியே ஒரு மனிதனின் ஒரு சமூகத்தின் இருப்பைப் பறிப்பதும் அந்த மனிதனின் அந்த சமூகத்தின் இயல்பான இயக்கத்தைப்பாதிக்கும். பொதுவாக வடமாகாண முஸ்லிம்களினதும் குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களினதும் இயல்புநிலையினை குறித்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை வெகுவாகப் பாதித்துள்ளது.
எனது சமூகத்தின் இருப்பு,வாழிடம், தனிமனித குடும்ப சமூக வாழ்க்கை,மனோநிலை, தொழில், கல்வி, மதமும் கலாசாரமும், பெண்களின் நிலை, சிறார்களின் நிலை என  எல்லாமே பாதிக்கப்பட்டேயிருக்கின்றது.இது உயிர்களை இழப்பதைவிடவும் ஒரு நிரந்தரமானதும் நீண்டகால தாக்குதிறன் மிக்க பாதிப்பினையும் எனது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இந்தப்பாதிப்புகள் அளவிட்டு மதிப்பிட்டுவிடக்கூடியதல்ல.
இதனை புலிகள் மிகத்திட்டமிட்ட அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள். எமது சமுகத்தின் தலைவர்களை கைது செய்து தடுத்துவைத்தார்கள், முக்கியஸ்தர்களை அச்சமூட்டி எச்சரித்து வெளியேற்றினார்கள், பெருந்தொகைப்பணத்தை கப்பமாகப்பெற்றார்கள், இளம் வயதினரை போராட்டத்தோடு இணைக்க முயன்றார்கள்,அடிக்கடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினார்கள் இதன் தொடரிலேயே மிகக்குறுகிய கால அவகாசத்தோடு (இரண்டு மணித்தியாளங்கள்) எம்மை வெளியேற்றினார்கள்.
வெளியேற்றத்தின் பின்னர் தமது செய்கையை நியாயப்படுத்தும் வித்தத்தில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை தமிழ் சமூகத்தில் பரப்பி விட்டார்கள் முஸ்லிம்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்று போலியாக குற்றம் சாட்டினார்கள்.ஆனால் கிடைக்கப்போகும் ஈழத்தில் தம்மைத்தவிர வேறு எந்த இனத்துவமும் இருக்கக்கூடாது என்பதும், முஸ்லிம்கள் இலங்கையின் இறைமையை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதுவும்,  கிழக்கிலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கான எச்சரிக்கையாகவுமே வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பினை புலிகள் மேற்கொண்டார்கள், 
இது குறித்து 2002ஆம் ஆண்டுவரை புலிகள் எவ்வித கருத்தையும் சொல்ல முன்வரவில்லை. 2002 ஏப்ரல் 10ஆம் நாள் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அண்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் தொடர்பாக கேட்கப்பட்டபோது அது ஒரு துன்பியல் நிகழ்வு மீண்டும் முஸ்லிம்கள் உடனடியாக குடியேறலாம் என்ற வசனங்களோடு தனது பதிலை மட்டுப்படுத்துக்கொண்டார். இதுவே 1990- 2002 வரை வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில் புலிகள் வெளியிட்ட முதலாவது உத்தியோகபூர்வ வார்த்தைப் பிரயோகமாகும். அதே வருடம் மே மாத்தின் ஆரம்பத்தில் புலிகளை யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பாக சந்தித்தபோது, சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களும் மீண்டும் குடியேறுமாறு முஸ்லிம்களை நான் தலைவர் சார்பாக அழைப்பு விடுக்கின்றேன் என்றார், ஏன் தலைவர் இந்த அழைப்பை நேரடியாக விடலாமே என்று கேட்டதற்கு தலைவர் அவ்வாறு செய்யமாட்டார் தலைவர் முஸ்லிம்களை வெளியேறச் சொல்லவில்லை அவர் முஸ்லிம்களை நேசிக்கின்றவர் என்ற பசப்பு வார்த்தைகள் மட்டுமே பதிலாக வெளிவந்தன.எனவே முஸ்லிம்களின் வெளியேற்றம் என்ற விடயத்தை புலிகள் இறுதிவரை அலட்டிக்கொண்டதாக நாம் காணவில்லை.
முஸ்லிம்களுடைய வெளியேற்றத்துடன் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் உடன்பாட்டுடன் இருக்கவில்லை. அதனை எதிர்த்த பலரை நாம் இன்றுவரை காணுகின்றோம், ஆனால் அவர்களால் புலிகளை மிகைக்கின்றவகையில் கருத்துச்சொல்ல முடியுமாக இருந்திருப்பினும் அதனை நடைமுறைப் படுத்துமளவிற்கு முடியாமலேயிருந்தது.
எனவே சொல்லொன்னாத் துன்பங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உட்பட்டுள்ள எனது சமூகத்திற்கு, புலிகளின் மாற்றாந்தாய் மனோநிலை மற்றும் தமிழர் தரப்பின் முக்கிய அரசியல் தலைவர்களின் மௌனங்கள் எமது இருப்புக்குறித்த சந்தேகத்துடன் கூடிய அச்ச உணர்வினை 2008வரை ஏற்படுத்தி தக்கவைத்துக் கொண்டிருந்தது. 2008ல் புலிகளின் அழிவினைத்தொடர்ந்து அந்த அச்ச உணர்வு உடனடியாக நீங்கிவிடவில்லை. 20வருட காலமாக தோற்றுவிக்கப்பட்ட நம்பிக்கையீனம் உடனடியாக இல்லாமலாக்கமுடியாது. அது படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும், குறிப்பாக தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் நல்லெண்ண முயற்சிகளே குறித்த அச்ச உணர்வினை முற்றாகப்போக்குவதற்கு வழிசெய்யும்.
வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிடம் எனது வேண்டுகோள்கள் வருமாறு
  1. புலிகளினால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் தனியான அரச கொள்கை முன்வைக்கப்பட வேண்டும்.
  2. பலவந்த இனச்சுத்திகரிப்பு ஒரு சமூகத்தில் தோற்றுவிக்கும் பாதிப்புகள் குறித்து மிகச்சீராக மதிப்பிடுவதற்கு இலங்கையில் உள்ள ஒரேயொரு மாதிரி வடக்கு முஸ்லிம்களே இதனைக் கருத்தில் கொண்டு எமது சமூகத்தின் நிலை குறித்து சீரான சமூகவியல் ஆய்வு நடாத்தப்பட்டு      அதனடிப்படையில் எமது சமூகம் கையாளப்பட வேண்டும்.
  3. எனது சமூகத்தில் தோன்றியுள்ள புதிய சமூகப்பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, வதிவிடப்பிரச்சினை, தொழில்சார் பிரச்சினை, பெண்களுக்கான பாதுகாப்பு, சிறுவர்களின் ஆரோக்கியம் போன்ற முக்கிய பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை நிவர்த்திக்கப்படும் வகையில் தீர்வுகள் பெற்றுத்தரப்படவேண்டும்
  4. தமிழர்தரப்பு; இதுவரை தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்ட புலிகளால் உங்களது சமுகத்தைப்போன்றே உங்களது சகோதர சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மனதார ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலான நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.அத்தோடு இது ஒரு தார்மீகப்பொருப்பாகவும் உணர்த்தப்படவேண்டும்.
  5. ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு நீடித்து நிலைக்கவேண்டுமாயின் புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை புலிகளால் மீறப்பட்ட பல  சர்வதேச ஒழுங்குகளுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் இதனை அரசே முன்னின்று மேற்கொள்ள வேண்டும்
ஆகிய ஐந்து கோரிக்கைகளையும் முன்வைத்து எனது சாட்சியத்தை நிறைவு செய்துகொள்கின்றேன்.
நன்றி.

No comments:

Post a Comment