1990ஆம் ஆண்டில் புலிகளின் பலவந்த வெளியேற்றத்தின் விளைவாக; நாம் நேசித்த எமது தாய்மண்ணை விட்டும் நாம் எமது சுயவிருப்பின்றி பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்.அதன் முதற்கட்ட விளைவாக தாய் நாட்டிலேயே அகதிகளாக வடபுலத்தை விட்டும் வெளியே நாம் சிதறிய நிலையில் குடியேற்றப்பட்டோம். எமது தாய் மண், நாம் நிம்மதியாய் வாழ்ந்த வாழிடங்கள், அழித்து சிதைக்கப்பட்டன, எமது வாழ்வு தங்கிநின்ற வாழ்வாதாரங்கள், தொழில்துறைகள், எம்மைவிட்டும் பறிபோயின, எமது மக்களின் அடையாளமாக இருந்த சமூக கலாசார விழுமியங்கள் மாற்றங் கண்டன, கல்வி எமக்கு காணல் நீராயிற்று,
இதற்குப்பகரமாக கொட்டில்களும் குடிசைகளும் எமது வாழ்விடங்களாயின, வறுமை எம்மோடு வந்து ஒட்டிக்கொண்டது, சுயமாக எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொண்ட நாம் தங்கி வாழ்வோராயினோம், அரச பதிவுகளுக்கும் அரச சார்பற்ற பதிவுகளுக்குமாகவே எமது காலங்களும் நேரங்களும் செலவாகின, எதேனும் நமது விடிவிற்காய் நடக்கும் என்ற ஏக்கத்துடனேயே ஆண்டுகள் இருபது கழிந்துபோயிற்று, யாழ்ப்பாணம் தெரியாமலேயே ஒரு தலைமுறை எம்மிடையே தோன்றி விட்டது, சிறுகச்சிறுக நாம் செய்த முயற்சிகள் எம்மை எமது தற்காலிக வாழிடங்களில் ஓரளவிற்கு நிரந்தரமாய் தங்கவைத்தது,ஆனால் அது நிரந்தரமானதல்ல, அங்கும் நாம் ஏராளமான சவால்களை தினம் தினம் எதிர்கொள்கின்றோம். எனவே எமது தாய் மண்ணை நோக்கி மீண்டும் வருவதே எமது விடிவாய், விடுதலையாய் நாம் எல்லோரும் உணருகின்றோம்
எப்படி பலவந்தமான வெளியேற்றம் எம்மீது சடுதியாய் திணிக்கப்பட்டதோ; அதே போன்று மீள்குடியேற்றமும் நாம் எவ்வித தயார் நிலையும் இல்லாத நிலையில் எம்மை நோக்கி வந்துள்ளது. நாம் அவசியம் மீளவும் எமது தாய் மண்ணில் குடியேறுவோம், என்பது எவ்வித ஐயப்பாடுகளுமற்ற யதார்த்தம். எனவே எமது மீள்குடியேற்றம் ஆரோக்கியமானதாக அமைய நாம் பின்வரும் நிலைப்பாடுகளை, நம்பிக்கைகளை இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றோம்.
· யாழ்ப்பாணம், இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களினதும் தாயகம், அவர்கள் அனைவரும் இங்கே மீளவும் வருவதற்கும் குடியேறுவதற்கும் முழுமையான உரிமையினைக் கொண்டவர்கள்.
· வெளியேற்றம் எப்படி சடுதியாக எம்மீது திணிக்கப்பட்டதோ, அதே போன்று மீள்குடியேற்றமும் உடனே சடுதியாக சாத்தியப்படக் கூடியதொன்றல்ல, அது படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
· மீள்குடியேற்றத்தின் முதன்மை அம்சமாகா “மீள்பதிவு”என்ற நடவடிக்கையினை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.யாழ்ப்பாணத்தில் மீளவும் பதிவினை மேற்கொண்ட அனைவரும் தாம் நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் குடியேறும்வரை தமது தற்காலிக இருப்பிடங்களில் குறித்தவொரு காலத்திற்கு அரச கருமங்களை மேற்கொள்வதற்கு பூரண உரிமையும் சுந்ததிரமும் வழங்கப்பட வேண்டும்
· மீள்பதிவுகளை மேற்கொண்ட அனைவருக்கும் அரச உதவிகள் நிவாரணங்கள், வீட்டுத்திட்டங்கள், காணிப்பகிர்வுகள் எவ்வித பாகுபாடும் இன்றி மிகவும் சமமாக மதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படவேண்டும்.
· யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்த நிலைமகள் காரணமாக பாதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, வடமராட்சி பகுதி மக்களின் மீள்குடியேற்ற செயற்திட்டத்திற்கு ஒத்ததான செயற்திட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களினது விடயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment