“யாழ் முஸ்லிம் பிரதேசம் 2020”
விசேட ஒன்றுகூடல் 19 டிசம்பர் 2010
1990 பலவந்த வெளியேற்றத்தின் பின்னர் சுதந்திர பூமியில் மீளவும் குடியேறவென நாமும் எமது சமூகமும் காத்திருக்கின்ற நிலையில் “யாழ் முஸ்லிம் பிரதேசம் 2020” என்ற விடயம் குறித்து நாம் எமது கவனத்தை செலுத்தவிருக்கின்றோம்.
எம் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கின்றது. அதுதான் எமது தாயக பூமியை மீண்டும் செழிப்பாக்கிப்பார்க்க வேண்டும் என்ற கனவு. அதற்காகத்தான் நாம் முயற்சிக்கின்றோம், இந்த ஒன்றுகூடலும் அதன் ஒரு அம்சம்தான்.
எமது கனவு
- யாழ் மாவட்டத்தில் 22 பள்ளிவாயல்களைக் கொண்ட மிக நெருக்கமான சமூக அமைப்பு 1990 வரை நிலவியது, அதனை மீண்டும் கட்டியெழுப்பி, ஒரு முன்மாதிரிமிக்க சமூகமாக நிறுவுதல்
- 7 முஸ்லிம் பாடசாலைகள் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் சிறார்களுக்கென்றும் இயங்கியது, அத்தகைய ஒழுங்கை கல்வியில் சாதனைபுரியும் தரத்துடன் மீண்டும் ஏற்படுத்துதல்
- சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது இருப்பிடங்களை மீளவும் கட்டியமைத்தல்
- யாழ் மண்ணில் வாழவிரும்பும் யாழ் மண்ணின் சந்ததியினர் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்
- இந்தப்பிரதேசத்தில் எமக்கிருந்த வர்த்தகரீதியான செல்வாக்கினை மீளவும் நிலைநிறுத்தி யாழ்ப்பாண வர்த்தகத்தில் பங்கேற்றல்.
- யாழ் மண்ணில் இஸ்லாத்தை நடைமுறை ரீதியான முன்மாதிரியுடன் முஸ்லிமல்லாதவர்களுக்கு எத்திவைக்கும் சமூகமாக அமைதல்
இ ந்தக்கனவை நனவாக்குவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திப்பதே இந்த ஒன்று கூடலின் நோக்கமாக இருக்கின்றது.சில யாதார்த்தங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
1990 வரை எமது நிலமை
· ஒரு செழிப்பான முஸ்லிம் பிரதேசம்
· கைத்தொழில்,வியாபாரம், மையமாகக் கொண்ட சமூக அமைப்பு
· மரபு ரீதியாக இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சமூக ஒழுங்கு
· கல்வி ரீதியாக சாதாரண அடைவுகளைக் கொண்ட சமூகம்
· யாழ் மாநகர அரசியலில் செல்வாக்குடைய சமூகம்
1990வரை எமக்கிருந்த சவால்கள்
· யாழ் முஸ்லிம்களின் தலைமைத்துவம்
· கல்வியில் காட்டப்பட்ட கவனயீனங்கள்
· ஈழப்போராட்டமும் அதில் முஸ்லிம்களின் பங்கும்
· இஸ்லாமிய சிந்தனையுடன் நெருக்கமான தொடர்பின்மை
· இஸ்லாத்தின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்கள்
1990 முதல் 2010
1990ன் வெளியேற்றமும் 2010 வரையான உள்ளூரிலே இடம்பெயர்க்கப்பட்ட அகதிவாழ்வும் எம்முள் ஏற்படுத்திய வடுக்கள் ஏராளம்; அவற்றை வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.
1997ல் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டபோது மீள்குடியேறமுடியும் என்று நாம் எண்ணினோம் இருப்புனும் புலிகள் தரப்பில் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை
2002இல் புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து மீள்குடியேறமுடியும் என்று நாம் எண்ணினோம் இருப்புனும் புலிகள் தரப்பில் மயக்கமான அழைப்பு மட்டுமே கிடைக்கப்பெற்றது, அதில் நம்பகத்தன்மையும் பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்கவில்லை. அரசிடமிருந்தும் எவ்வித உத்தரவாதமும் ஒத்துழைப்பும் இருக்கவுமில்லை.
2008 மே மாதத்தின் பின்னரே சுதந்திரபூமியில் மீளவும் குடியேற வாய்ப்பும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது.
இரண்டு மணித்தியாளங்களுக்குள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சமூகம்
இருபது வருடங்களை அகதிவாழ்வில் கழித்த சமூகம்
மீளவும் குடியேறுவது என்பது சுலபமான விடயம் அ ல்ல நிறையவே திட்டமிடலும் ஒழுங்குபடுத்துதல் அறிவியல் பின்புலமும் இதற்கு துணை நிற்க வேண்டும்.
20 வருடங்களாக கைவிடப்பட்ட ஒரு பிரதேசத்தில் மீள் கட்டுமானம் என்பதும் புனர் நிர்மானம் என்பதும் உடனடியாக சாத்தியப்படக்கூடிய விடயங்கள் அல்ல என்ற யதார்த்ததைப் புரிந்த நிலையில் மீள்குடியேற்றம் சார்ந்த ஒரு பொது வேலைத்திட்டத்தை நோக்கி நாம் எமது கவனத்தை செலுத்தவேண்டியிருக்கின்றது.
மீள் குடியேற்றம் என்பது பின்வரும் முக்கிய 4 காரணிகளால் தீர்மானிக்கப்படும்
- மீள்குடியேறவுள்ள மக்களின் நிலையும், அவர்களது விருப்பும் முயற்சிகளும்
- மீள் குடியேற்றத்துக்கு துணை நிற்கும் சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்
- மீள் குடியேற்றத்துக்கு துணை நிற்கும் சமூக ஒழுங்கு
- மீள் குடியேற்றத்துக்கான அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள்
மீள் குடியேற்றத்தில் நிலவும் அடிப்படை சவால்கள்
- உளவியல் அல்லது சிந்தனா ரீதியான சவால்கள்
- மீள் குடியேற்றத்தில் பொதுவாக நிலவும் ஆர்வமற்ற தன்மை
- மீள்குடியேறுவோரின் மீள்குடியேற்றம் குறித்த தவறான மனோநிலைகள்
- உலகவாழ்வு குறித்த இஸ்லாத்தின் சரியான நிலைப்பாடு அறியப்படாத நிலை
- இஸ்லாமிய சிந்தனையினது ஒழுக்க விழுமியங்களினதும் செல்வாக்கற்ற தன்மை
- பௌதீகரீதியான சவால்கள்
- வதிவிடப்பிரச்சினை
- காணிப்பிரச்சினை
- வீதியமைப்புகளில் நிலவும் குறைகள்
- வடிகாலமைப்பு மற்றும் மின்சாரம், நீர் விநியோகம்
- பாடசாலை, மற்றும் பாலர் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள்
- பள்ளிவாயல்கள்
- சனசமூக நிலையங்கள்
- சுகாதார மத்திய நிலையங்கள் இன்மை
- வாசிகசாலை
- விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள்
- வர்த்தக நிலையங்களும் சந்தையமைப்பும்
- தொழில் ரீதியான சவால்கள்
- கைத்தொழில் சார்ந்த சவால்கள்
- வியாபாரத்தில் நிலவும் சவால்கள்
- சமூக ரீதியான சவால்கள்
- பல்வேறுபட்ட அமைப்புகளும் பல்வேறு நோக்கங்கள் கருதி உடன்பாடற்ற வகையில் செயற்படுகின்ற நிலை
- புதிதாக மார்க்கத்தை ஏற்றுக்கொள்வோருக்கான சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுதல்
- எமது பிரதேசங்களில் புதிதாக குடியேறியுள்ள இந்து கிறிஸ்தவ குடிகள்
- அரசியல் ரீதியான சவால்கள்
- வாக்காளர் மீள்பதிவு
- கிராம நிலதாரி பிரிவுகள்
எனவே இவ்வாறான சவால்களும் விடயங்களும் முன்னெடுக்கப்படவேண்டிய சூழலில் எமது மீள் குடியேற்றம் செயற்திட்டம் இருக்கின்றது, இதனை நாம் எவ்வாறு மேற்கொள்ள இருக்கின்றோம்.
1. தனிநபர்கள் தாமாக முன்வந்து மீள் குடியேற்றத்துக்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ள முடியும்
2. தனிநபர்கள், மீள் குடியேற்றத்துக்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ள முடியும்
3. சமூக அமைப்புகள் மீள் குடியேற்றத்துக்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ள முடியும்
4. அரசாங்கம் மீள் குடியேற்றத்துக்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ள முடியும்
ஆனால் ஒரு சமூகம் என்றவகையில் எம்மீது ஒரு பொருப்பு இருக்கின்றது, இத்தகைய மீள் குடியேற்ற செயற்திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவண்ணம் ஒத்துழைப்புகளை வழங்குவதும் எம து சமூக ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதும்.
எனவே அத்தகைய ஒத்துழைப்புக்கான அமைப்பாக நாம் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவோம். இஸ்லாம் கூட்டமைப்பை கட்டாயமாக வலியுறுத்தும் மார்க்கம். ஒற்றுமையும் கூட்டமைப்புமே பரகத்தின் வெற்றியின் அடிப்படைகளாகும். கூட்டமைப்பே எமது பலம்.
இது சமூக நலன்கருதி இவ்விடத்தில் கூடியுள்ள அனைவரினதும் கடமையும் கூட. இது குறித்து அல்லாஹ் அல்குர் ஆனிலே குறிப்பிடும்பொழுது.
எமது கட்டளையைக் கொண்டு நேர்வழியின்பால் (சமூகத்தை) வழிநடத்துகின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மேலும் நல்லவைகளைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்தை வழங்கிடுமாறும் அவர்களுக்கு நாம் அறிவித்தோம். அவர்கள் எங்களுக்கு அடிபணிகின்றவர்களாக இருந்தனர்' அன்பியா :21)
மேலும், நரகத்தின்பால் அழைக்கின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் யாராலும் உதவிசெய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சாபத்தை விதியாக்கினோம். மேலும் மறுமையில் அவர்கள் இழிவடைந்தோராக இருப்பார்கள்'. (ஸூறதுல் கஸஸ் : 41)
எனவே நாம் ஒரு கூட்டமைப்பாக செயற்படுவோம்,
ஏன் கூட்டமைப்பு
1. மீள்குடியேற்ற விடயங்களை கூட்டாக மேற்கொள்வதற்கு
2. முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கு
3. வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு
4. ஒரே வேலைத்திட்டம் இரு பக்கங்களில் நடவாமல் இருப்பதற்கு
5. மீள் குடியேற்றத்துக்கான மேற்பார்வைகளை மேற்கொள்வதற்கு
கூட்டமைப்பு எவ்வாறு அமையும் அல்லது செயற்படும்
- கூட்டமைப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு அமைப்பும் தனது அடையாளத்தையும், சுயாதீனமான செயற்பாட்டினையும் உறுதி செய்யும்.
- ஒவ்வொரு அமைப்பும் தமது செயற்திட்டங்களை, அதற்கான நிதியினை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்
- சமூகம் சார்ந்த தரவுகள், தகவல்கள் அமைப்புகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும்
- சமூகத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்து அமைப்பில் அங்கம் வகிக்கும் எல்ல அமைப்புகளுக்கும் விளக்கங்கள் இருக்கும்
- நிதி விடயத்தில் கூட்டமைப்பு எவ்வித ஈடுபாட்டையும் கொண்டிருக்காது
- இரு மாதங்களுக்கு ஒருதடவை கூட்டமைப்பு ஒன்றுகூட்டப்படும்
- கூட்டமைப்பின் தலைவர் இரு மாதங்களுக்கு ஒருதடவை சுழற்சியமைப்பில் நியமிக்கப்படுவார்
- ஒரு வருட காலத்துக்கு பொதுச்செயலாளர் மற்றும் இணைப்பாளர் நியமிக்கப்படுவர்.
- கூட்டமைப்பு அதற்கான ஒழுக்கக்கோவையினைத் தயாரித்துக்கொள்ளும்.
தயாரிப்பு
அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி)
No comments:
Post a Comment