1990ல் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே பண்பாட்டு ரீதியான மாற்றங்களை 20 வருடங்கள் கடந்தபின்னரும் இன்றுவரை குறைந்தளவிலேயே அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இது வருத்தப்படவேண்டிய விடயமே. எமது சிந்தனைப்பாங்கு, நாம் விடயங்களை அணுகும் முறை, எமக்கும் எமது உறவுகளுக்கும் இடையில் நிலவும் மேலோட்டமான உறவுகள், மற்றவரை நாம் அணுகும் விதம் போன்ற முக்கியவிடயங்களில் எம்மிடையே ஒருவித பலவீனம் நிலவுவதை நாம் உனருகின்றோம், இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவிதத்தில் எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் அமைந்துவிடுகின்றன, இவ்வாறான நடவடிக்கைகளால் எமது சமூக அமைப்பு மிகவும் பலவீனப்பட்டுப்போகின்றது. எனவே எமது மக்களின் சிந்தனைக்காக ஒரு சில வார்த்தைகள் இங்கே,
நாம் எல்லோரும் மிக நீண்டகாலம் அகதிவாழ்வால் அவஸ்த்தைப்பட்டோம், எமது சமூக ஒழுங்கில் வறுமை நிரந்தர நண்பனாகிவிட்டது, கல்விக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன, கற்றவர்களும் எம்மைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள், இவ்வாறான நிலையில் நாம் இஸ்லாத்தைவிட்டும் தூரமாகிவிட்டோமா என்ற சுயவிசாரனை எமக்கு அவசியப்படுகின்றது.
இஸ்லாம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விட்டு மற்றவர்களையே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்புகின்றனர். தொல்லையும் துன்பமும் நேரும்போதுஅவர்கள் அல்லாஹ்வை விட்டும் தூரமாகின்றார்கள், இயற்கை அனர்த்தம் ஆபத்துகள் ஏற்படும்போது மட்டும் அவர்கள் இறைவனின் உதவியை நாடுவார்கள். நன்மைகள் கிட்டும்போதும் அல்லது அவர்களுக்கு ஏதாவது இலாபம் கிடைக்கும்போது அவர்கள் அல்லாஹ்வை மறந்துவிடுகின்றார்கள் தன்னுடைய செயல்களுக்குத் தான் கணக்குக் கொடுத்தாக வேண்டுமென்றும், தன்னுடைய தீயச்செயல்களுக்குத் தண்டனை அனுபவித்தாக வேண்டுமென்றும் நம்பாத ஒருவன் தன்னுடைய ஆசாபாசங்களுக்கு அடிமையாகி முற்றிலும் தன்னலம் நாடுபவனாகவே விளங்குவான்.இத்தகைய உளப்பாங்கு மனிதனை சுயநலவாதியாக மட்டுமே தொடர்ந்தும் வைத்திருக்கும் இதனை எமது சமூகத்தில் இன்று நாம் காணுகின்றோம்.
எமது சமுதாயத்தில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் ஏராளமாகக் காட்டவியலும். உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், புகழ்பெற்றிருந்து, இப்போது புகழ் மறைந்து மக்களின் கவனத்தைக் கவரும் நிலையில் இல்லாதவர், நஷ்டமைந்துவிட்ட பணக்காரன் ஆகியோரிடமிருந்து மக்கள் விலகி விடுகின்றார்கள். நன்றி கெட்டவர்களைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகின்றோம், பங்காளிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதைக் காண்கிறோம். வட்டி ஆதிக்கம் செலுத்தும் உறவுகளில் எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளையும் காணுகின்றோம், எங்கும் பொய் மலிந்திருக்கின்றது, தமக்கு தேவையில்லாத விடயங்களின் பால் மக்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள், அன்றாட வாழ்க்கையில் பணமே மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
நட்புறவிலும் துரோகம் வெகு சாதாரணமாக ஊடுருவி காணப்பெறும் ஒரு சமுதாய நிகழ்வாகி விட்டது. ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் மக்கள் தங்களின் மிக நெருங்கிய நண்பர்களையும் விட்டு விலகிச் சென்று ஆதாயம் விளையும் புதிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய காரணங்களுக்காக அநேக மக்கள் தங்கள் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். தாம்பத்திய உறவுகளிலும் இதுவேதான் உண்மை. அற்ப காரணங்களுக்காகக் கணவன் மனைவியை விட்டும், மனைவி கணவனை விட்டும் பிரிந்து சென்று விடுகிறார்கள். தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாக, தாங்கள் இழைத்த தீயச் செயல்களை யாரும் பார்க்கவில்லை என்பதற்காக அவை என்றுமே மறைவாகவே இருக்கும் என்று எண்ணி இவ்வளவு பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை அத்தீயச் செயல்களினின்றும் தடுப்பவர் யாரும் அல்லது தடுப்பது எதுவும் எமது சமூகத்தில் இல்லை. ஆகச் சுருங்கச் கூறுமிடத்து ஒருவரை ஒருவர் நம்பாத சமுதாயத்தில் நம்பிக்கைத்துரோகமும் வஞ்சகமும் நிறைந்து ஒருவரோடு ஒருவர் தீய உள்நோக்கத்துடனேயே பழகுகின்றனர்.
மார்க்கப் பண்புகளைப் பேணாதவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும் கூட பாசமின்றியும் கொடுமையாகவும் நடந்து கொள்வார்கள் என்பது தெளிவாகிறது. கடமை உணர்வின்மை மனித உறவுகளை எல்லாம் சீர்குலைக்கிறது. மனித ஆன்மாவில் குழப்பத்தையும் கேட்டையும் விளைவிக்கின்ற இந்தச் சமுதாயக் சீர்கேடு மார்க்கப் பண்புகளைப் பேணுவதன் மூலமே களையப்படும். இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும்போது மக்கள் மற்றவரை பயனற்றவர்களாகக் கருத மாட்டார்கள். மனிதனுக்குச் சிறப்பைத் தருவது நிச்சயமாக அவனுடைய அழகிய தோற்றமும் செல்வ வளமும் பதவியும் அல்ல. அவனுடைய இறையச்சமும் ஓழுக்க மேம்பாடுமே அவனை மதிப்புமிக்கவனாக்கும் பண்புகள். மனிதனுக்கு வழங்கப்பட்ட இம்மை வாழ்வு அவனைச் சோதனைக்குள்ளாக்குவதற்காகவே. இவ்வுலகில் குறுகிய காலம் வாழ்ந்துவிட்டு மனிதன் நிரந்தர வீடாகிய மறுமையை அடைவான். மறுமையில் அவனுடைய ஒழுக்கப் பண்புகளை கணக்கிடப்படும். எனவே நற்பண்புகளே பலனளிக்கும். இறைவன் அவனுடைய அடியார்கள் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக வாழும்படி வலியுறுத்துகின்றான். இவ்விதம் வாழ்வதன் மூலமே இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
துன்பமும் பிரச்சினையும் எழும் காலங்களில் பேணப்படும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் இறை நம்பிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கும். கீழ்வரும் நபிமொழி இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கடமையுணர்வை எடுத்துரைக்கிறது.
முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் சகோதரர் ஆவர். ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய மாட்டார்; ஒருவரை ஒருவர் கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரனின் தேவையைக் கவனிப்பவரின் தேவையை இறைவன் நிறைவு செய்வான்; தன் சகோதரனின் கவலையைப் போக்குபவரின் கவலைகளில் ஒன்றை மறுமை நாளில் அல்லாஹ் நீக்கி விடுவான். (புஹாரி, முஸ்லிம்)
எனவே இத்தகைய நல்ல சமுதாய அமைப்பு உருவாக்கப்படாதவிடத்து எமது சமுதாயம் மேலும் மேலும் பலவீனப்பட்டு சின்னாபின்னமாகிவும், எமது மீள்குடியேற்ற செயற்பாட்டில் முதன்மையாக பண்பாட்டுரீதியான மாற்றத்துக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். மாற்றம் என்பது எம் ஒவ்வொருவரிடமும் உருவாகவேண்டும், மாற்றத்தின் ஆரம்பம் நானாக இருப்பேன் என்று நாம் உறுதிபூணவேண்டும்.
இணையத்தில் இதனைப்படிப்பவர்கள் தமது கலந்துறையாடலுக்குரிய விடயமாக இதனை அமைத்துக்கொள்ளுங்கள் உங்களது மேலான கருத்துக்களையும் இங்கே பதிவிடுங்கள்.
நன்றி


No comments:
Post a Comment