Sunday, May 29, 2011

குடாநாட்டில் புதிய கடன் வழங்கலில் கடற்றொழிலாளர் உள்ளடக்கப்படவில்லை

புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு இலங்கை வங்கியுடன் இணைந்து செயற்படுத்துகின்ற கடன் வழங்கும் திட்டத்தில் கடற்றொழிலாளர்கள் உள்வாங்கப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கடற்றொழிலை மேம்படுத்துவதற்காக கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வங்கிகளூடாகப் பல்வேறு கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாலும் உரிய அறிவுறுத்தல்கள் இன்மையாலும் தாங்கள் அதனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தற்போது புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு இலங்கை வங்கியுடன் இணைந்து குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குக் கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை சாவகச்சேரியிலும் சனிக்கிழமை காரைநகரிலும் நடைபெற்றன.
ஏனைய சுயதொழில்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்குக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கடற்றொழில் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் மூலமே பரிசீலிக்கப்படுமென்று நேர்முகத் தேர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கூடியளவு நிதி வேண்டுமென்றும் அதனால் துறைசார் அதிகாரிகளின் சிபார்சுகளின் பின்னர் அவர்கள் மூலமாக இதற்கான கடன்திட்டம் மேற்கொள்ளப்படுமென்றும் காரைநகருக்கு வந்திருந்த மேற்படி அமைச்சினதும் வங்கியினதும் அதிகாரிகள் கூறியதாகக் கடற்றொழிலுக்காக விண்ணப்பித்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment