Monday, May 2, 2011

இந்திய அரசின் வீட்டுத் திட்டப் பணிகள் குடாநாட்டில் அடுத்த வாரம் ஆரம்பம்; யாழ்.அரச அதிபர் நேற்றுத் தெரிவிப்பு

 
இந்திய அரசின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் யாழ். மாவட்டத்தில் அடுத்தவாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 7,400 வீடுகள் கட்டப்படவுள்ளன.
 
இந்திய அரசின் வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பெயர்கள் தமக்குக் கிடைக்காமையினாலே குறித்த பணிகள் தாமதமடைந்து வருவதாக இந்தியத் தூதர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிபர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நாம் பயனாளிகளின் பெயர் விவரங்களை அவர்களுக்கு சமர்ப்பித்து விட்டோம். அதனடிப்படையில் தற்போது வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.முன்னோடியாக புதிதாக 150 வீடுகளும், புனரமைப்பு என்ற வகையில் 2 ஆயிரம் வீடுகளும் மேலும் புதிதாக கட்டிக்கொடுக்கும் வகையில் 5 ஆயிரத்து 250 வீடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளன.பயனாளிகள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட, பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டனர் என்றார் அவர்.இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா இந்திய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லை நட்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    
 
03 மே 2011, செவ்வாய் 7:20 மு.ப (UTHAYAN ONLINE)

No comments:

Post a Comment