யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கு அரசின் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது.புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்ட உதவிகள் பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்படுவதாக உதயனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பாக யாழ். அரச அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற இந்த முஸ்லிம்களில் அநேகமானோர் புத்தளம் மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளனர். அங்கு இருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு அரசினாலும் உலக வங்கியினாலும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ளார்கள். இங்கு அவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவிகள் உட்படப் பல உதவிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அதற்கான முன்னேற்பாடாக அவர்களுக்குப் பதிவு அட்டையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் புத்தளத்தில் சட்ட ரீதியாக வீட்டுத் திட்டங்களைப் பெற்றவர்களின் பெயர் விவரங்களைப் புத்தளம் மாவட்ட அரச அதிபர் எமக்குத் தற்போதுதான் அனுப்பி வைத்துள்ளார். அதன்படி புத்தளத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றவர்களுக்கு இங்கு மீண்டும் வீட்டுத்திட்டங்கள் வழங்கமுடியாது. அவர்கள் இங்கு தமது செலவிலேயே தமக்கான தங்குமிடங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். புத்தளத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளாமல் உள்ள முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்டங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வாரத்தில் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.இதற்கான நடவடிக்கைகளை யாழ். பிரதேச செயலாளர் முன்னெடுத்து வருகிறார். வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத முஸ்லிம் மக்களுக்கு அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி கடிதங்களை அனுப்பி வைக்குமாறு நான் அவரைப் பணித்துள் ளேன் என்றார்.
No comments:
Post a Comment