Sunday, May 8, 2011

யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி: நோர்வே தூதுவர்

யாழ். மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கலை கலாசார விழாவில் தான் கலந்துகொண்டதாகவும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்வுகளில் யாழ், வன்னி மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான கலைப்படைப்புக்களைத் தாம் மெய்மறந்து ரசித்ததாகவும் குறிப்பிட்ட அவர், யாழ் பொது நூலகம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையே காணக்கூடியதாக இருந்ததாகவும் தற்போது சிறந்ததொரு சாதகமான சூழ்நிலையில் அம்மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள வசந்தபுரம் பகுதியில் 6 லட்சம் ரூபா பெறுமதியான 50 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் தவிர முன்பள்ளி, பொதுமண்டபம் உள்ளிட்ட பொது வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நோர்வே அரசு தயாராக இருப்பதாகவும் இதன் போது நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை மேம்படுத்தல், தனியார் துறையினை விருத்தி செய்தல், இசைத் தொடர்பு பாரம்பரியத்தை பேணுதல், வடகடல் (சீநோர்) தொழிற்சாலையை நவீன மயப்படுத்தல் மற்றும் கண்ணிவெடிகள் அகற்றுதல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் முழுமையான பங்களிப்பை வழங்கும் எனவும் நோர்வே தூதுவர் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்ப்பு அரசியலால் அல்லாமல் இணக்க அரசியல் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அழிவு யுத்தத்தினால் அவலப்பட்ட எமது மக்களின் துன்ப, துயரங்களுக்கு தீர்வு காணப்படும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு ஆற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வாழைச் செய்கையை அபிவிருத்தி செய்வது மட்டுமன்றி யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் இந்தியாவின் துறைசார்ந்த தொழிற்துறை நிபுணர்களுடாக வாழைநார் சார்ந்த பல்வேறு சுயதொழில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்த அவர் வட பகுதியில் தமது பூர்வீக இடங்களில் முஸ்லீம் மக்கள் மீளக்குடியேறுவதற்கு தாம் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், வட பகுதியிலும் ஏனைய சில இடங்களிலும் அவ்வப்போது நடைபெறுகின்ற சமூக விரோத செயல்களுக்கு எமது கட்சியின் பெயரை சில ஊடகங்கள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றமை வேதனை அளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை நோர்வே அரசு தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் எனவும், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தித்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்ட உதவித் திட்டங்களைத் தாம் எதிர்பார்ப்பதாகவும் நோர்வே தூதுவரிடம் அவர் கேட்டுக்கொண்டார். இன்றைய இந்த சந்திப்பில் நோர்வே தூதுவரின் மேலதிக செயலாளர் சொன்றே பியோட் வீற் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment