Tuesday, May 10, 2011

கூட்டமைப்பு-அரச தரப்பு பேச்சுகளில் முஸ்லிம் தரப்புக்கும் இடம்வேண்டும்; பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

 
news
 யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதிப்புக்கு உள்ளான ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பேச்சுகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவர் கூறியவை வருமாறு:
உலகம் பூராவும் நடைபெற்ற சகல பேச்சுகளிலும் பகிரங்கத் தன்மை பேணப்படாத பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை வரலாறாகும். பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள இரு தரப்புகளுடனும் பேச்சுகள் நடைபெறுகின்ற பொழுது அது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.  மக்களுக்குத் தெரியப்படுத்தப்படாத பேச்சுகள் சட்டபூர்வமான பேச்சுகள் அல்ல. பேச்சுகளின் விவரங்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகமாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின்போது பகிரங்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களில் எந்தத் தோல்வியும் இடம்பெறவில்லை என்றும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில் காணப்பட்ட உடன்பாடுகளால் பேச்சுகள் தோல்வியடைந்தன என்றும் பஷீர்சேகுதாவூத் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலக முஸ்லிம் இளைஞர் தொழுகையினதும் கல்வி அபிவிருத்தி அமைப்பினதும் ஏற்பாட்டுக் குழு ஒழுங்கு செய்திருந்த ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்.மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களின் விவரங்களை இரகசியமாக வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் கல்வியில் எவ்வாறு ஒரு பகிரங்கத் தன்மை தென்படுகிறதோ அவ்வாறு இந்த நாட்டின் அனைத்து விடயங்களிலும் பகிரங்கத் தன்மை அவசியமாகும். விசேடமாகப் பேச்சுகளில் பகிரங்கத் தன்மை மிக முக்கியமானது. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுகள் முடிவுற்று,  மீளவும் ஆரம்பிக்கப்பட்ட யுத்தமும் முடிந்துள்ள நிலையில், தமிழ் மக்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற, தமிழர் தரப்பு ஜனநாயக சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசு பேச்சுகளை நடத்துகிறது.
 
யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்த நாட்டில் எல்லா விடயங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நியதி. வளர்ச்சிப் பாதையில் நாடு முன்னேறுவதற்கு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் யுத்தம் பரவியிருந்த காலத்தில் சகல மக்களும் எவ்வித இன, மத, பிரதேச வேறுபாடுகளுமின்றி அச்சத்துடன் வாழ்ந்தார்கள்.
 
இந்த அச்சம் அகன்று நிம்மதியான வாழ்வு கிடைத்திருக்கின்ற சூழ்நிலையில் இந்த நாட்டை முன்னேற்றுவதாக இருந்தாலும், நாட்டின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து ஒன்றுபட்ட சமுதாயங்களாகவும், சமத்துவம் உள்ள மக்களாகவும், இலங்கையர் என்ற உணர்வுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர், மலாயர், மலையக மக்கள் அனைவரும் வாழவேண்டுமாக இருந்தால் பகிரங்கத் தன்மையும், சமத்துவமும், கல்வி முன்னேற்றமும் மிகமிக முக்கியமானவை.இப்படி அவர் கூறினார்.

No comments:

Post a Comment