பலாலியில் உள்ள யாழ். மாவட்ட பாதுகாப்புப்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள விகாரையில் புத்தபெருமானின் 28 அவதாரங்களையும் எடுத்துவிளக்கும் 28 புத்தர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தையொட்டி இந்தச் சிலைகள் விமானம் மூலம் பலாலிக்கு எடுத்துவரப்பட்டு அங்குள்ள விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பலாலிப் படைத் தலைமையகம் தெரிவித்தது.
பலாலி இராணுவத் தலைமையகத்தில் விகாரையை அண்டிய அரச மரம் ஒன்றைச் சுற்றி ஏழு பக்க வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்ட இடத்திலேயே அவை வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் நான்கு புத்தர் சிலைகள் வீதம் வைக்கப்பட்டுள்ளன.2600 ஆவது புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்கவின் சிந்தனையின் பிரகாரமே 28 புத்தர் சிலைகள் கொண்ட விகாரை அமைக்கப்பட்டுள்ளது.புத்த பகவானின் 28 அவதாரங்களையும் வெளிப்படுத்தும் விதமாகவே 28 புத்தர் சிலைகள் அந்த அவதாரங்களின் பெயர்களுடன் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
வெண்ணிறத்தினாலான அந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் ஓர் அடி உயரமானவை ஆகும். இந்தச் சிலைகள் அனைத்தும் அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. அவை வேறு எங்கும் எடுத்துச் செல்லப்படமாட்டா.இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் 18 சிலைகள் யாழ். மாவட்டத்திலுள்ள படைத்தளபதிகளாலும் ஏனைய 10 சிலைகள் படைத் தலைமையகங்களாலும் வழங்கப்பட்டவை. இது குறித்த விவரக் குறிப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லில் தீட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவல்களை எமது செய்தியாளரிடம் பலாலி ஊடகப் பிரிவின் அதிகாரி ஒருவர் விவரித்தார்.
No comments:
Post a Comment