Friday, May 27, 2011

புலனாய்வு செய்வதற்கு புதிதாக 5 பேர் கொண்ட விசாரணைக்குழு

வடக்கு, கிழக்கில் நடைபெற்றவை என்று கூறப்படும் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாகப் புதிதாகப் புலனாய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கென 5 பேர் கொண்ட நீதிவான்கள் குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிபதிகள் குழுவானது தனது புலனாய்வுகளின் விவரங்களை இலங்கை மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கும் என்று அந்தக் குழு வின் புதிய தலைவர் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியாந்த பெரேரா மேற்படி குழுவின் நியமனம் பற்றித் தெரிவிக்கையில்
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் மூன்று பேர் சிங்கள சமூகத்தையும் ஏனைய இருவரில் ஒருவர் தமிழ்ச் சமூகத்தையும் மற்றவர் முஸ்லிம் சமூகத்தையும் சேர்ந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாய் இருந்து ஓய்வுபெற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தச் செயற்பாடுகள் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் என்று தாம் எதிர்பார்க்கிறார் என்று கூறிய நீதியரசர் பெரேரா,  இந்த நீதியரசர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்கு இணங்கச் செயற்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்கு வழக்குகளின் அடிப் படையிலேயே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் மாத அடிப்படையில் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழுவின் விசாரணைகள் விசேடமாக உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களிடமிருந்து வந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாகவே அமைந்திருக்கும். என்றாலும், நாட்டிலுள்ள ஏனைய மக்களும் சுயேச்சையாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். மனித உரிமைகள் குழு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களிடமிருந்து சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏராளமான முறைப் பாடுகளைப் பெற்றுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகளை மிக விரைவாக நடத்தி முடிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாத பிரதிவாதிகள் தொடர்பாக நீதியரசர் பெரேரா தெரிவிக்கையில், அப்படியானவர்களை அழைப்பித்துக் காரணம் காட்டும்படி கேட்கப்போவதாகக் கூறினார்.
நான் ஏற்கனவே பொலிஸ் மாஅதிபருடன் இது பற்றிக் கலந்தாலோசித்துள்ளேன். பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத் துவதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப் படாதவிடத்து முறையீட்டாளர்கள் குழுவுக்கு அல்லது பொலிஸ் மாஅதிபருக்கு அது பற்றி அறிவிக்க வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மனித உரிமை மீறல்களால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் குறித்து நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டுவிக்கப் போவ தாகவும் நீதியரசர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment