Friday, May 6, 2011

யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பிலிருந்து 4 இலட்சத்து 30 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்படும்?

யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பு மீளாய்வின் படி 2009 ஆம் ஆண்டு இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதாக யாழ்.தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின் படி 2009 ஆம் ஆண்டு இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதுடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் 2010 ஆம் ஆண்டுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இம் மாதம் 31 ஆம் திகதியே வெளியாகுமென திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; 2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது. இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகளில் 90 வீதமானவை நிறைவு பெற்றுள்ளன. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுவிடும்.

புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் (குறிப்பாக யாழ் மாவட்ட முஸ்லிம்கள்) எனப் பல்வேறு காரணங்களால் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிலிருந்த சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளனர். மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் இந்தப் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர். இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வருமென்றும் தெரிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 இலட்சத்து 16 ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்

No comments:

Post a Comment