"தமிழர்களின் பிரதிநிதிகளாகப் பலர் உள்ளனர். அவர்களில் யார் ஏக பிரதிநிதிகள் என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிப்பர்'' என்றார் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன.அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் பதிலளிக்க மாட்டோம். ஆனால், அதில் அடங்கியுள்ள சில விடயங்களுக்கு விளக்கமளிப்போம். இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு நாம் விளக்கமளிக்கத் தொடங்கியுள்ளோம். யுத்த காலத்தில் இதைவிட மோசமான குற்றச்சாட்டுகள் எமக்கெதிராக முன் வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நாம் உலக நாடுகளுக்கு விளக்கமளித்தோம். அதனால் உலக நாடுகள் எம்மீது கொண்டிருந்த சந்தேகம் நீங்கியது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவ்வாறான நிலைதான் ஏற்படும்.குற்றச்சாட்டுகளைக் கண்டு நாம் பயப்படமாட்டோம். கடந்த காலங்களில் மிகப்பாரதூரமான குற்றச்சாட்டுகளை நாம் சந்தித்து அவற்றைப் பொய்யாக்கியிருக்கின்றோம்.யுத்த காலத்தின்போது அரசு மனித உரிமைகளை மதித்து நடந்தது என்பதற்கு அதிக சான்றுகள் எம்மிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நாம் உலக நாடுகளுக்குக் காண்பிப்போம்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று அரசு அரசியல் தீர்வை வழங்காததால்தான் ஐ.நாவின் அறிக்கை வெளியிடப்பட்டது என்று சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்கமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஆனால், தமிழரின் ஏக பிரதிநிதிகளாக எம்மால் எவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைத் தமிழர்களே தீர்மானிக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment